தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதைத் தடை செய்ய தாய்லாந்து அரசு திட்டம்

2 mins read
b724289c-d283-47db-8433-fb0e4be3493b
கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தாய்லாந்து அரசாங்கம் கொண்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ

பேங்காக்: பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தடை செய்ய தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, உடனடியாக மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தாய்லாந்து சுகாதார அமைச்சர் சோல்னான் ஸ்ரீகாவ் பிப்ரவரி 6ஆம் தேதியன்று தெரிவித்தார்.

தாய்லாந்தில் கஞ்சா பயன்படுத்துவது குற்றச் செயல் அல்ல என்று 2022ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் அறிவித்தது.

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலிலிருந்து கஞ்சா 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கப்பட்டது.

இதன் விளைவாக கஞ்சா விற்கும் கடைகள் தாய்லாந்து முழுவதிலும் பல இடங்களில் திறக்கப்பட்டன. குறிப்பாக, தலைநகர் பேங்காக்கில் பல கஞ்சா கடைகள் திறக்கப்பட்டன.

தாய்லாந்தில் திடீரென்று பல கஞ்சா கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து, கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதைத் தடை செய்யும் மசோதா அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் ஸ்ரீகாவ் தெரிவித்தார்.

கஞ்சாவை சுகாதாரம் மற்றும் மருத்துவத்துக்காக மட்டுமே பயன்படுத்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

பொழுதுபோக்கிற்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது தவறு என்பதே எங்கள் நிலைப்பாடு,” என்று அமைச்சர் ஸ்ரீகாவ் கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி ஏற்ற திரு சிரேட்டா தவிசின், பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதற்கு எதிராக அடிக்கடி குரல் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் காரணங்களுக்கு மட்டுமே கஞ்சா பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு.

கடந்த வாரயிறுதியில் பிரிட்டிஷ் இசைக் குழு ‘கோல்ட்பிளே’ பேங்காக்கில் கலைநிகழ்ச்சி நடத்தியது. கலைநிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் முழுவதும் கஞ்சா வாடை வீசியதாக கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் சமூக ஊடகம் மூலம் அதிருப்தி தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்