நிலச்சரிவில் புதையுண்ட பேருந்துகள்; ஐவர் மரணம் 31 பேர் காயம்

1 mins read
17ca7747-1a54-4623-9b16-3863aeae8ac9
தேடுதல், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணியாளர்கள். - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்சில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகளுடன் வீடுகளும் புதையுண்டன.

நிலச்சரிவு காரணமாக குறைந்தது ஐந்து பேர் மாண்டதாகவும் 31 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தென்பிலிப்பீன்சில் உள்ள தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களை அந்த இரண்டு பேருந்துகளும் ஏற்றிச் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த இரண்டு பேருந்துகளிலும் குறைந்தது 28 பேர் இருந்ததாகவும் பேருந்துகள் மண்ணுக்கு அடியில் போவதற்கு முன்பு எட்டு பேர் சன்னல் வழியாக வெளியேறித் தப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பிலிப்பீன்ஸ் நேரப்படி பிப்ரவரி 6ஆம் தேதி மாலை நிகழ்ந்தது.

மண் குவியலுக்கு அடியிலிருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அவர்கள் பேருந்தில் இருந்தவர்களா என்பது இன்னும் தெரியவில்லை.

பேருந்துகளில் இருந்தவர்களைத் தவிர்த்து மேலும் 31 கிராமவாசிகள் காயமடைந்தனர்.

இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தவாவ் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிலச்சரிவுக்குப் பிறகு அந்தக் கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவ்வப்போது சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டதாலும் போதுமான வெளிச்சம் இல்லாததாலும் மீட்புப் பணி தடைப்பட்டுள்ளதாக தங்கச் சுரங்கத்தை நிர்வகிக்கும் அபெக்ஸ் மைனிங் நிறுவனம் கூறியது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 285 குடும்பங்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் பிலிப்பீன்ஸ் ராணுவமும் உதவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்