தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஃபாவுக்குள் நுழையும் இஸ்ரேலிய ராணுவம்; பாதுகாப்பான வழிக்கு நெட்டன்யாகு உறுதி

2 mins read
750b3d62-ccfa-41b5-be90-739a530715d1
ராஃபா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் தனது விருப்பத்தை நெட்டன்யாகு மறுவுறுதிப்படுத்தியிருக்கிறார். - படம்: ஏஎஃப்பி

காஸா: காஸாவில் உள்ள தெற்கு நகரமான ராஃபாவுக்குள் ஊடுருவும் இஸ்ரேலிய ராணுவத்தின் நடவடிக்கை பிப்ரவரி 11ஆம் தேதியன்று தொடர்ந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு அங்கு இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற வழி அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பிப்ரவரி 11ஆம் தேதி அளித்த நேர்காணலில் அந்நகருக்குள் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தும் தனது விருப்பத்தை அவர் மறுவுறுப்படுத்தினார்.

காஸா பகுதியின் 2.4 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அந்நகருக்குள் நிரம்பியிருக்கும் வேளையில் படுகொலை நடக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக அனைத்துலகம் எச்சரித்துள்ளது.

“ஆனால் நாங்கள் நடவடிக்கையை மேற்கொள்வோம்,” என்று நெட்டன்யாகு ஏபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக பாதுகாப்பான பாதையை ஏற்படுத்தி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளதாக அவரது நேர்காணலை வெளியிட்டுள்ள ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால் எகிப்தின் எல்லைக்கு அருகே தள்ளப்பட்டு தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் எங்கு செல்ல முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது பற்றி நெட்டன்யாகுவிடம் கேட்கப்பட்டதற்கு, “விரிவான திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று மட்டுமே தற்போது சொல்ல முடியும் என்றார்.

இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக தெற்கு நோக்கி முன்னேறி வரும் நிலையில் துருப்புகள் இன்னமும் நுழையாத கடைசி நகரமாக ராஃபா இருந்து வருகிறது.

ஆனால் அந்நகரத்தின்மீது கிட்டத்தட்ட நாள்தோறும் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன.

“ராஃபா பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. எல்லா இடங்களுக்கும் இலக்கு வைக்கப்படுகிறது,” என்று பாலஸ்தீனத்தின் முகம்மது சைடாம் கூறினார்.

பிப்ரவரி 10ஆம் தேதி இஸ்ரேலிய தாக்குதலில் ஒரு காவல்துறை வாகனம் அழிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்