தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஃபா மீது இஸ்‌ரேல் தாக்குதல்; பலர் மரணம், இரு பிணைக்கைதிகள் மீட்பு

2 mins read
d9288773-ac36-44ca-81b1-c0a8b6fcb7cd
ரஃபா நகரம் மீது குண்டுமழை பொழிந்த இஸ்‌ரேல். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஜெருசலம்: காஸாவின் தென்பகுதியில் உள்ள ரஃபா நகர் மீது இஸ்‌ரேல் நடத்திய ஆகாயப் படைத் தாக்குதலில் குறைந்தது 67 பாலஸ்தீனர்கள் மாண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் பிப்ரவரி 12ஆம் தேதியன்று தெரிவித்திருந்தனர்.

ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறினர்.

இஸ்‌ரேலிய சிறப்புப் படைகள் நடத்திய அதிரடி நடவடிக்கையின் விளைவாக ரஃபாவில் இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகள் இருவர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

60 வயது திரு ஃபெர்ணான்டோ சிமோன் மர்மானும் 70 வயது திரு லுயிஸ் ஹாரேயும் காப்பாற்றப்பட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

அந்த இரண்டு ஆடவர்களும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று கிப்புட்ஸ் நிர் யிட்ஷாக்கிலிருந்து ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகவும் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

“அதிரடி நடவடிக்கை மிகவும் சவால்மிக்கதாக இருந்தது. பல நாள் திட்டத்துக்குப் பிறகு அதை நடத்தினோம். தக்க தருணம், சூழ்நிலைக்காக காத்துக்கொண்டிருந்தோம்,” என்று இஸ்‌ரேலிய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெச்ட் தெரிவித்தார்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக சரியான திட்டம் வகுக்காமல் ரஃபா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று இஸ்‌ரேலிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்திய பிறகும் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஃபாவில் பலர் தூங்கிக்கொண்டிருந்தபோது அந்நகரம் மீது தாக்குதல் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இஸ்‌ரேல் பொழிந்த குண்டுமழை அந்நகர மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இனி ரஃபாவுக்குள் இஸ்ரேலின் மற்ற படைப் பிரிவுகளும் நுழைந்து தாக்குதல் நடத்தும் என்று அந்நகர மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு நிகழ்ந்தால் பிணைக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடராது என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்