காஸா மக்களுக்குக் கைகொடுக்கும் ஜோர்தான் மன்னர்

காஸா மக்களுக்குக் கைகொடுக்கும் ஜோர்தான் மன்னர்

1 mins read
c08601b6-ba69-4ece-8534-d859615cf103
ஜோர்தான் மன்னர் அப்துல்லா. - படம்: ஏஎஃப்பி

அம்மான்: போர் காரணமாக நிலைகுலைந்துள்ள காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விமானம் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஜோர்தானிய விமானப் படை இறங்கியுள்ளது.

இதில் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவும் ஈடுபட்டதாக பிப்ரவரி 11ஆம் தேதியன்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசி, பட்டினி, நோய் ஆகியவற்றால் வாடி துயர் உறும் காஸா மக்களுக்கு உதவ சில அரபு நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் முன்வந்துள்ளன. ஆனால் அவற்றுக்கு இஸ்ரேல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தப் போக்கை இஸ்‌ரேல் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தவே மன்னர் அப்துல்லா நேரில் சென்று உதவிக்கரம் நீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 6ஆம் தேதியன்று, ராணுவ சீருடை அணிந்திருந்த மன்னர் அப்துல்லா, ஜோர்தானிய விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் சென்று காஸா மக்களுக்குத் தஞ்சம் அளிக்கும் மருத்துவமனைகளில் மருத்துவச் சாதனங்களை விநியோகித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் காட்டும் காணொளியை ஜோர்தான் வெளியிட்டுள்ளது.

காஸா மக்களுக்கு உதவி செய்யும் இத்தகைய நடவடிக்கையில் ஜோர்தானிய விமானப் படை இதுவரை 11 முறை ஈடுபட்டுள்ளது. அவற்றில் குறைந்தது இரண்டு முறை பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து விமானப் படைகளுடன் அது இணைந்து செயல்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மன்னர் அப்துல்லாவின் இரண்டாவது மகளும் ஜோர்தானிய விமானப் படை விமானியுமான இளவரசி சல்மா, காஸா மக்களுக்கு மருத்துவச் சாதனங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்