‘ரஷ்யா தாக்கினால் பாதுகாக்க மாட்டோம்’

டோனல்ட் டிரம்ப்பின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

2 mins read
a666087b-a74d-4aa1-9222-be0f4a50c4cd
பிப்ரவரி 10ஆம் தேதி சவுத் கேரோலினாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய டோனல்ட் டிரம்ப் - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் நேட்டோ நாடுகளும் அவர் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்துள்ளனர்.

திரு டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை பேசியபோது எதிர்காலத்தில் ரஷ்யா தாக்கினால் நேட்டோ நாடுகளைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும் அப்படி பாதுகாப்பதாக இருந்தால் அதற்குரிய செலவுகளுக்கு நேட்டோ நாடுகள் பங்களிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதாவது. அமெரிக்கா தனது பணத்தை செலவழித்து ஏன் நேட்டோ நாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதுபோல அவரது பேச்சு அமைந்திருந்தது.

இதற்கு அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் டிரம்ப்பை சாடியுள்ளனர்.

“இதனால்தான் நீண்டகாலத்திற்கு டோனல்ட் டிரம்ப் அதிபர் பதவிக்குத் தகுதியானவர் அல்லர் என்று கூறி வருகிறேன்,” என்று குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளரான கிறிஸ் கிறிஸ்டி ‘செய்தியாளர்களுடன் சந்திப்பு‘ என்ற என்பிசி நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று சவுத் கேரோலினாவில்அரசியல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திரு டிரம்ப், சில நேட்டோ நாடுகள் கடமையிலிருந்து தவறுவது குறித்து குறை கூறியிருந்தார்.

பெரிய நாட்டின் தலைவர் ஒருவரிடம் தான் கூறியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“இல்லை, நான் உங்களை பாதுகாக்க முடியாது. இன்னும் வேண்டுமானால் அவர்கள் (ரஷ்யா) என்ன வேண்டுமானாலும் செய்ய ஊக்குவிப்பேன். நீங்கள் தற்காப்பு செலவுக்கான பணத்தை கொடுத்தே ஆக வேண்டும்,” என்று அடையாளம் குறிப்பிடப்படாத தலைவரிடம் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துகளால் வெள்ளை மாளிகையிலும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

நேட்டோவின் 31 உறுப்பு நாடுகளில் பல நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் இரண்டு விழுக்காடு பாதுகாப்பு செலவின இலக்கை அடைய தவறிவிட்டன. இதனால் அமெரிக்காவுடன் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே குடியரசுக் கட்சியில் டோனல்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சவாலாக இருக்கும் தெற்கு கேரோலினா ஆளுநரான நிக்கி ஹாலேயும் டிரம்ப்பை விமர்சித்துள்ளார்.

சிபிசிக்கு பேட்டியளித்த நிக்கி ஹாலே, “ஒரு நாட்டின் மீது படையெடுத்து அரை மில்லியன் மக்கள் இறப்பதற்கு அல்லது காயம் அடைவதற்கு காரணமாக இருந்த உக்ரேனுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புட்டின் பக்கம் சாயக்கூடாது,” என்று கூறியுள்ளார்.

திரு டிரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹமும் டிரம்பின் கருத்துக்கு உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“டிரம்ப் அதிபராக இருந்தபோது ரஷ்யா எந்த நாட்டின் மீதும் படையெடுக்கவில்லை. அவர் மீண்டும் அதிபரானால் ரஷ்யா இனியும் அப்படி செய்யாது,” என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்