வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே மிகக் கடுமையான போர் நிலவி வருகிறது.
இதனால் பசி, பட்டினி, நோய், மரணம் என காஸா மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஆறு வாரங்களுக்குப் போரை நிறுத்திவைக்கும்படி அமெரிக்கா அழைப்பு விடுப்பதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆறு வாரப் போர் நிறுத்தம் நீண்டகாலப் போர் நிறுத்தத்துக்குப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அவர் கூறினார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனும் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காஸாவின் தெற்குப் பகுதிக்குள் இஸ்ரேலியப் படைகள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகவும் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை மோசமடையக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இவற்றையும் சேர்த்து வேறு பல சவால்மிக்க விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.
தமது ஆலோசனையின்படி நடந்துகொள்ளாமல் காஸாவில் தொடர்ந்து குண்டுமழை பொழிய உத்தரவிட்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மீது அதிபர் பைடன் அதிருப்தி அடைந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவில் போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்ய மத்தியக் கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்,
போர் நிறுத்தத்தின்போது ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என்றும் காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கலாம் என்றும் அதிபர் பைடன் தெரிவித்தார்.
போர் நிறுத்தத்துக்கு மன்னர் அப்துல்லாவும் அழைப்பு விடுத்தார்.
“போர் தொடர்வதை அனுமதிக்கக்கூடாது. போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்ய வேண்டும். இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்,” என்று மன்னர் அப்துல்லா வலியுறுத்தினார்.

