தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஃபா மீதான தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தக்கூடும்; ஐநா எச்சரிக்கை

2 mins read
7178bfc4-dba3-4ba0-a11b-0306eddc2ecf
காஸாவில் பாலஸ்தீனர்கள் போதுமான உணவு, மருந்து இன்றி அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

ராஃபா, காஸா முனை: காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தினால் பேரழிவு ஏற்படக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஸா மீது நடத்தப்படும் மிகக் கடுமையான தாக்குதல்களால் பாலஸ்தீனர்கள் நிலைகுலைந்திருப்பதாக ஐநாவின் மனிதாபிமானப் பிரிவுத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்தார்.

சொந்த பந்தங்கள், உடைமைகளை இழந்து தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறிய பல பாலஸ்தீனர்கள் ராஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், ராஃபா நகரத்தையும் இஸ்‌ரேல் தாக்கினால் அதன் விளைவாக ஏற்படும் அழிவு, அவலநிலை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருக்கும் என்றார் அவர்.

வேறு எங்கும் போக முடியாமல், செய்வதறியாது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் ராஃபாவில் தவிப்பதாக திரு கிரிஃபித்ஸ் கூறினார். போதிய உணவு, மருந்து இன்றி அவர்கள் அவதியுறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஃபாவைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அவர்களில் பலருக்கு மரணம் நிச்சயம் என்று அவர் கவலை தெரிவித்தார்.

ஆனால், ஹமாஸ் போராளிகள் ராஃபாவில் பதுங்கியிருப்பதாக இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறுகிறார்.

ஹமாஸ் அமைப்பை வேருடன் அழிக்க அவர் சூளுரைத்துள்ளார்.

அப்போதுதான் காஸா தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, ராஃபா மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த இஸ்‌ரேல் தயாராகி வருகிறது.

இதற்கிடையே, இஸ்‌ரேல் எந்நேரமும் குண்டு மழை பொழியக்கூடும் என்ற அச்சமும் பதற்றமும் ராஃபாவில் உள்ள பாலஸ்தீனர்களை வாட்டி வதைக்கிறது.

ஏற்கெனவே, ராஃபா மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்‌ரேல் தொடங்கிவிட்டது.

தங்கள் சொந்த ஊரில் தங்களுக்கு இருந்த அனைத்தையும் இழந்து அடைக்கலம் நாடி ராஃபாவுக்குச் சென்ற பாலஸ்தீனர்களில் சிலர் தற்போது மீண்டும் பெட்டிப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.

தங்கள் சொந்த ஊர் அழிந்துவிட்டபோதிலும் மீண்டும் அங்கு செல்வதாக அவர்கள் கூறினர்.

காஸாவில் பாதுகாப்பான இடம் ஏதும் கிடையாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, காஸா போரில் பாலஸ்தீனப் பொதுமக்களுக்கு இஸ்‌ரேல் தீங்கு விளைவித்ததாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அமெரிக்கா விசாரணை நடத்துகிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்‌ரேலியப் படைகள் காஸா மீது தாக்குதல் நடத்துவதாகவும் அதன் விளைவாக பாலஸ்தீனப் பொதுமக்களுக்கு மரணம், காயங்கள் விளைவிக்கப்பட்டிருப்பதாகவும் குறைகூறப்படுகிறது

இது தெரிந்திருந்தும் இஸ்‌ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை விற்கிறது என்று கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்