பேங்காக்: சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ர மருத்துவமனை தடுப்பு மையத்தில் இருந்து பிப்ரவரி 18ஆம் தேதி (ஞாயிறு) பரோலில் விடுவிக்கப்படுவார் என்று தற்போதைய பிரதமர் சிரேத்தா தவிசின் தெரிவித்து உள்ளார்.
பணபலம் படைத்த அரசியல் பெரும்புள்ளியான தக்சின், 74, கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.
ஆட்சியில் இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக தமக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பதை அறிந்த அவர், அதனைத் தவிர்க்க வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்.
ஏறக்குறைய 15 ஆண்டுகளை வெளிநாட்டில் கழித்த பின்னர் கடந்த ஆண்டு நாடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் மாதம் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வெளியிடப்படாத சுகாதாரப் பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனை தடுப்பு மையத்தில் ஆறு மாதங்களைக் கழித்து உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை தாய்லாந்து மாமன்னர் மகா வஜிராலாங்கோர்ன் ஓராண்டாகக் குறைத்தார்.
இவ்வாரத் தொடக்கத்தில் தக்சின் பரோலில் வெளிவர அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், அவர் எப்போது பரோலில் விடுவிக்கப்படுவார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. அவருக்கான பரோல் அனுமதி பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சனிக்கிழமை (பிப்ரவரி 17) செய்தியாளர்களிடம் பேசிய திரு சிரேத்தா, தக்சின் விடுவிக்கப்படும் தேதி பிப்ரவரி 18 என்று கூறினார். மேல்விவரம் எதனையும் தெரிவிக்காத அவர், “எல்லாம் சட்டத்திற்கு இணங்க நடைபெறும்,” என்று குறிப்பிட்டார்.
பரோலில் விடுவிக்கப்பட்டாலும் தக்சின் மேலும் சில சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். கடந்த 2015ஆம் ஆண்டு ஊடகங்களிடம் பேசியபோது மன்னராட்சியை அவமதிப்பு செய்த ஒரு குற்றச்சாட்டும் அதில் அடங்கும்.

