பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனைச் சந்தித்து ஆக்ககரமான வகையில் பேச்சு நடத்தியிருக்கிறார்.
சீன நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் குறித்தும் வாங் யி பேசியதாக சீன வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக் கிழமை அன்று (17 பிப்ரவரி) தெரிவித்தது.
சனிக்கிழமை (16 பிப்ரவரி) அன்று மியூனிக்கில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் இருவரும் சந்தித்தனர். அப்போது மக்களுக்கு இடையிலான பரிமாற்றம் பற்றி இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டதாகவும் பேச்சு வார்த்தை ஆக்கரமானதாக, வெளிப்படையாக இருந்ததாகவும் சீன அமைச்சு அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
உக்ரேன் நெருக்கடி, கொரியத் தீபகற்ப விவகாரம் உள்ளிட்ட வட்டாரப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். கொரிய தீபகற்பத்தில் இரு தரப்பு தூதர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர் என்று அறிக்கை குறிப்பிட்டது.
ஆனால் பேச்சின் மேல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
2023 நவம்பரில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்த பிறகு இரு தரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பொருளியல் உச்ச மாநாட்டின்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். ராணுவத் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உடன்பாடுகள் அப்போது எட்டப்பட்டன.