நியூயார்க்: வங்கிகளை ஏமாற்றி கூடுதல் கடன் தொகை பெறும் நோக்கில் தமது நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்திக் காட்டிய குற்றத்துக்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு $354.9 மில்லியன் அமெரிக்க டாலர் ($479 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, நியூயார்க் நிறுவனங்களில் அதிகாரியாகவோ இயக்குநராகவோ பதவி வகிக்க அவருக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, டிரம்ப்பின் சொத்து வர்த்தகத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பின் வர்த்தகங்களைக் கண்காணிக்க சுயேச்சைக் குழு ஒன்றை நியமிப்பதாக நியூயார்க் நீதிபதி ஆர்த்தர் எங்கரோன் கூறினார்.
கூடுதல் கடன் தொகையைப் பெற டிரம்ப்பும் அவரது குடும்பத்தினரும் தங்கள் நிகர சொத்து மதிப்பை ஆண்டுக்கு 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் என மிகைப்படுத்திக் காட்டி, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக வங்கி அதிகாரிகளை ஏமாற்றியதாக நியூயார்க் தலைமைச் சட்ட அதிகாரி லெட்டிஷியா ஜேம்ஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டிரம்ப்புக்கு எதிராக அவர் வழக்கு தொடுத்தார்.
இதற்கிடையே, தாம் குற்றம் புரியவில்லை என்று டிரம்ப் அடித்துக் கூறுகிறார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தமக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு எதிராக வழக்கு தொடுத்த லெட்டிஷியா ஜேம்ஸ் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்புக்கு எதிரான இந்த மோசடி வழக்கு அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

