தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா மருத்துவமனையில் இஸ்ரேலிய படைகள்; 14 பேர் வெளியேற்றம்

2 mins read
b915ade4-89f9-4ad0-a23e-0821889eed1b
ராஃபாவில் இஸ்ரேலிய தாக்குதலால் அழிந்துபோன வீடு. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

காஸா: இஸ்ரேலியப் படைகள் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனைக்குள் புகுந்ததை அடுத்து அங்கிருந்து 14 நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (பிப்ரவரி 19) அவ்வாறு தெரிவித்தது.

எனினும், அந்த மருத்துவமனை மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுவதை இஸ்‌ரேல் மறுத்தது.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பு, அதனிடம் இருக்கும் பிணைக் கைதிகளை ரமலானுக்குள் ஒப்படைக்கப்படாவிட்டால் ராஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

ரமலான் அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று தொடங்குகிறது.

இஸ்ரேலின் போர் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று (18 பிப்ரவரி) இத்தகவலை வெளியிட்டார். கூடுமானவரை யாரும் போரில் பலியாகாமல் இருக்க அமெரிக்காவுடனும் எகிப்துடனும் இணைந்து காஸா மக்கள் வெளியேறுவதற்கு இஸ்ரேலிய ராணுவம் வகைசெய்யும் என்று திரு பெனி கான்ட்ஸ் எனும் அந்நபர் குறிப்பிட்டார்.

ராஃபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தைக் கைவிடுமாறு பல தரப்பினர் இஸ்ரேலுக்கு நெருக்குதல் அளித்து வருகின்றனர். இஸ்ரேலின் பங்காளி நாடுகளும் அவற்றில் அடங்கும்.

திட்டத்தைக் கைவிடாவிட்டாலும்கூட தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பொதுமக்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு இஸ்ரேலிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியபோது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் ராஃபாவுக்குத் தப்பியோடினர்.

இந்நிலையில், அடுத்த ஆறிலிருந்து எட்டு வாரங்களுக்கு இஸ்ரேல், காஸாவில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடரப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்த நால்வர் இந்த விவரத்தை வெளியிட்டனர்.

அந்தக் காலகட்டத்தில் ஹமாஸ் படைகளைப் பெரிய அளவில் வலுவிழக்கச் செய்ய முடியும் என்று இஸ்ரேலின் ராணுவத் தலைவர்கள் நம்புகின்றனர். அதனைத் தொடர்ந்து குறைந்த வீரியத்துடன் போரைத் தொடர முடியும் என்று இஸ்ரேலிய ராணுவம் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் பெயர்களைத் தெரிவிக்க விரும்பாத நான்கு அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டனர்.

ராஃபாவில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக அனைத்துலக சமூகம் கருத்துரைத்து வருகிறது. எனினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கும் வாய்ப்புகள் குறைவு என்று முன்னாள் இஸ்ரேலிய உளவுத் துறை அதிகாரியான ஏவி மெலாமெட் சொன்னார். அவர், 1980களிலும் 2000களிலும் இடம்பெற்ற பாலஸ்தீன எழுச்சியின்போது பேச்சுவார்த்தை நடத்தியவரும் ஆவார்.

ராஃபா தாக்குதல், மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று உலகத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்