தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஸ்பெயினின் அடுக்குமாடிக் குடியிருப்பைப் பொசுக்கிய பயங்கரத் தீ விபத்து

10 நிமிடத்தில் கட்டடம் முழுக்க பரவிய தீ; நால்வர் மரணம், பலர் பாதிப்பு

3 mins read
67e9978a-29df-4661-ab35-6059f32b227d
ஸ்பெயினின் வெலன்சியா நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் கட்டடம் முழுவதும் எரிந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

வெலன்சியா: ஸ்பெயினின் வெலன்சியா நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.

ஆறு தீயணைப்பு வீரர்கள், சிறு குழந்தை உட்பட குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிபிசி செய்தி தெரிவித்தது.

15 பேரை இன்னும் காணவில்லை என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கம்பனார் குடியிருப்புப் பேட்டையில் உள்ள 14 மாடி கட்டடத்தில் பற்றியெரிந்த தீ, பக்கத்து கட்டடத்திற்கும் பரவியது.

தீயில் சிக்கிக்கொண்டவர்களை பாரந்தூக்கி மூலம் தீயணைப்பாளர்கள் மீட்டனர்.
தீயில் சிக்கிக்கொண்டவர்களை பாரந்தூக்கி மூலம் தீயணைப்பாளர்கள் மீட்டனர். - படம்: ஏஎஃப்பி

தீயணைப்பு வீரர்கள் வீடுகளின் மாடப்பகுதியில் இருந்து மக்களை மீட்பதைக் காண முடிந்ததாக ஊடகச் செய்திகள் கூறின.

பலத்த காற்று தீயைத் தூண்டியது, ஆனால் விரைவில் தீப்பற்றி எரியக்கூடிய சாயப்பூச்சு, தீ வேகமாகப் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் அந்தப் பகுதி தீயினால் கருகிய பெரும் கருங்குன்றுகளாகக் காட்சியளித்தது. அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அந்த அடுக்குமாடியில் உள்ள 138 குடியிருப்புகளில் மொத்தம் 450 பேர் வசித்து வந்தனர் என்று கட்டடத்தின் மேலாளரை மேற்கோள் காட்டி எல் பைஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

ஏழாவது மாடியில் வசிக்கும் ஒரு தம்பதி உட்பட பல குடியிருப்பாளர்களை பாரந்தூக்கிகளைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ வேகமாகப் பரவிய சில மணிநேரங்களில், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் குறித்து ஸ்பெயினில் கேள்விகள் எழுந்துள்ளன.

தீ வேகமாகப் பரவியதற்கும் கட்டடத்தின் வெளிப்பூச்சும் கட்டுமானப் பொருள்களும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ வேகமாகப் பரவியதற்கும் கட்டடத்தின் வெளிப்பூச்சும் கட்டுமானப் பொருள்களும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

வெலன்சியாவின் தொழில்துறை தொழில்நுட்ப பொறியாளர்கள் கல்லூரியின் துணைத் தலைவரான எஸ்தர் புச்சாடெஸ், தான் முன்பு அக்கட்டடத்தை ஆய்வு செய்ததாக ஸ்பெயின் செய்தி நிறுவனமான ஈஎஃப்ஈ-யிடம் கூறினார்.

அதன் வெளிப்புறத்தில் ஒருவகையான பாலியூரிதீன் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதன் எரியக்கூடிய தன்மை குறித்த அச்சத்தால் தற்போது அப்பொருள் பரவலான பயன்பாட்டில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ வேகமாக மற்றத் தளங்களுக்கும் பரவியதாக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் வசிக்கும் ஒருவர் லா செக்ஸ்டா தொலைக்காட்சியிடம் கூறினார்.

“10 நிமிடத்தில் தீ கட்டடம் முழுக்க பரவிவிட்டது,” என்ற அவர், கட்டடத்தின் முகப்பில் உள்ள பொருள்களால் தீ பரவியிருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.

தீ வேகமாகப் பரவுவதற்கு கட்டடத்தின் வெளிப்பூச்சு காரணமாக இருக்கலாம் என பொறியாளர் டேவிட் ஹிகுவேரா தெரிவித்தார்.

கட்டடத்தின் வெளிப்புற அடுக்கில் உள்ள நுரைப்பஞ்சு இன்சுலேட்டருடன் கூடிய அலுமினியத் தகடுகள் “வெப்பத்தையும் குளிரையும் தடுப்பதில் மிகவும் சிறந்தவை, ஆனால் மிகவும் விரைவில் தீப்பற்றக்கூடியவை,” என்று அவர் கூறினார்.

தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பாளர்கள்
தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பாளர்கள் - படம்:ராய்ட்டர்ஸ்

உள்ளூர் நேரப்படி ஏறக்குறைய மாலை 5.30 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். அப்பகுதியில் ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்று ஆர்டிஎஃப் செய்தி தெரிவித்துள்ளது. வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“வலென்சியாவில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மக்களுக்கும் எனது ஆதரவை தெரிவிக்க விரும்புகிறேன். அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அவசரகாலப் பணியாளர்களைப் பாராட்டுகிறேன் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்