அலபாமா: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முனைந்துள்ள திரு டோனல்ட் டிரம்ப், ‘ஐவிஎஃப்’ எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிசெய்யும்படி அலபாமா மாநில ஆட்சியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாம் அந்த சிகிச்சைமுறையை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அலபாமா மாநில உயர் நீதிமன்றம் சென்ற வாரம், உறையவைக்கப்பட்ட ‘கரு’வும் குழந்தையும் சமமாகவே கருதப்படுவதாகக் கூறி, அதனை அழிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.
செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படாத ‘மனிதக் கருக்கள்’ அழிக்கப்படுவது குறித்து நீதிமன்றம் அவ்வாறு கூறியது.
இதனையடுத்து சில மருந்தகங்கள் ‘ஐவிஎஃப்’ சிகிச்சை முறையைக் கைவிடுவதாகத் தெரிவித்தன.
இவ்வேளையில், அலபாமா இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டுமென்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) திரு டிரம்ப் வலியுறுத்தினார்.
“வலுவான, செழிப்பான, ஆரோக்கியமான அமெரிக்கக் குடும்பங்களை உருவாக்குவதையே, எனது தலைமையின்கீழ் குடியரசுக் கட்சி எப்போதும் ஆதரிக்கும். பெற்றோர் பிள்ளை பெற்றுக்கொள்வதை எளிதாக்குவதையே நாங்கள் ஆதரிக்கிறோம்; கடினமாக்குவதை அன்று. ஆகவே அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை போன்ற கருவுறுதலுக்கு உதவும் சிகிச்சைகள் தொடர்ந்து கிடைப்பதை ஆதரிக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அலபாமா நீதிமன்றத்தின் தீர்ப்பை, கருக்கலைப்பை எதிர்க்கும் பிரிவினர் வரவேற்றுள்ளனர். ஆனால் இதன் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்தாய்வுகளில் பெரும்பாலான அமெரிக்கர்கள், கருக்கலைப்பிற்கு சட்ட அங்கீகாரம் தரப்படலாம் என்று கூறியுள்ளனர்.

