தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியுரிமை ரத்து குறித்த மேல்முறையீட்டில் பிரிட்டிஷ் பெண்ணுக்குத் தோல்வி

1 mins read
c0f14bb0-90df-465d-b831-fb4a67929792
தேசியப் பாதுகாப்பு அடிப்படையில் ஷமிமா பேகத்தின் (புகைப்படத்தில்) குடியுரிமையை 2019ஆம் ஆண்டு பிரிட்டன் ரத்து செய்தது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் தனது குடியுரிமை ரத்து செய்யப்பட்டது தொடர்பில் செய்திருந்த மேல்முறையீடு பிப்ரவரி 23ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.

பள்ளி மாணவியாக இருந்தபோது சிரியா சென்ற ஷமிமா பேகம் அங்கிருந்த தடுப்புக்காவல் முகாமில் காணப்பட்டார். அதையடுத்து, தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி 2019ஆம் ஆண்டு பிரிட்டன் அவரது குடியுரிமையை ரத்து செய்தது.

தான் ஆட்கடத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற கோணத்தை பிரிட்டிஷ் அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என்றும் அதனால் அந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது என்றும் வாதிட்டார். ஆனால் 2023 பிப்ரவரியில் கீழ் நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

சென்ற அக்டோபரில் லண்டனிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நேற்று (பிப்ரவரி 23) நிராகரிக்கப்பட்டது.

பேகம் தனது விதியைத் தானே எழுதிக்கொண்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது அன்று என்பதால் அவரது மனு நிராகரிக்கப்படுவதாகக் கூறினார். பிரிட்டிஷ் அரசாங்கம் அத்தீர்ப்பை வரவேற்றுள்ளது.

தற்போது 24 வயதாகும் பேகம் தனது 15ஆம் வயதில் லண்டனிலிருந்து பள்ளி நண்பர்கள் இருவருடன் சிரியா சென்று, ஐஎஸ்ஐஎஸ் போராளி ஒருவரை மணந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றார். அக்குழந்தைகள் மூவரும் கைக்குழந்தைகளாக இருந்தபோதே மாண்டுவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்