நிக்கி ஹேலியின் சொந்த மாநிலத்திலேயே வாகை சூடிய டிரம்ப்

1 mins read
1f963ae5-44c2-476f-b9f0-1582a1d5637b
சவுத் கரோலைனாவைக் கைப்பற்றிய பிறகு ஆதரவாளர்களிடம் பேசிய டோனல்ட் டிரம்ப். - படம்: புளூம்பர்க்

கொலம்பியா, சவுத் கெரோலைனா: இவ்வாண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமாக வாக்களிப்பு நடத்தப்படுகிறது.

இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

இரண்டாவது இடத்தில் முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹேலி உள்ளார்.

இந்நிலையில், நிக்கி ஹேலியின் சொந்த மாநிலமான சவுத் கரோலைனாவில் வாக்களிப்பு நடைபெற்றது.

இதில் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.

இதனால் குடியரசுக் கட்சியின் பிரதிநிதியாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அவர் நெருங்குகிறார்.

எதிரணியின் சொந்த மாநிலத்திலேயே வெற்றி பெற்றது அவரது வலுவான நிலையை நிரூபிப்பதாகக் கூறப்படுகிறது.

டிரம்ப்புக்கு எதிராகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளபோதிலும் அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளிடமிருந்து கூடுதல் கடன் வாங்க தமது வருமானத்தை மிகைப்படுத்திக்காட்டியதாகக் கூறி நியூயார்க் நீதிமன்றம் அண்மையில் டிரம்ப்புக்கு அபராதமும் நியூயார்க்கில் வர்த்தகம் செய்யத் தடையும் விதித்தது.

இதுவரை அயோவா, நியூ ஹேம்ஷியர், நிவேடா, யுஎஸ் வர்ஜின் தீவுகள், சவுத் கேரோலைனா ஆகிய மாநிலங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இருப்பினும், அதிபர் பைடனை டிரம்ப்பால் தோற்கடிக்க முடியாது என்றும் அது தம்மால் மட்டுமே முடியும் என்று நிக்கி ஹேலி தொடர்ந்து கூறி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்