காஸா மக்களைக் காப்பாற்ற இஸ்ரேல் ராணுவம் திட்டம் அறிவிப்பு

காஸா மக்களைக் காப்பாற்ற இஸ்ரேல் ராணுவம் திட்டம் அறிவிப்பு

2 mins read
ae17104f-bf8d-42a3-9275-4881067aad51
கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையே நடந்த சண்டையில் சேதமடைந்த நாஸ்ஸெர் மருத்துவமனையின் ஒரு பகுதி. - படம்: ஏஎஃப்பி

காஸா: இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்புக்கும் நடைபெற்று வரும் போரில் அப்பாவி காஸா மக்கள் கொல்லப்படுவதையும் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் திட்டம் வகுத்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவின் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் தெற்குப் பகுதியான ராஃபாவில் தரை வழி மேற்கொள்ளும் தாக்குதல் மூலம்தான் நாங்கள் முழுமையான வெற்றியைப் பெறமுடியும் என்று நெட்டன்யாகு அறிவித்துள்ளார். அந்தத் தாக்குதல் மாதக் கணக்கில் நீடிக்காது. நாங்கள் அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விட்டோமெனில், சில வாரங்களில் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அப்போதுதான் எங்களுக்கு முழு வெற்றி கிட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலால் அப்பாவி மக்கள் கொத்தாகக் கொல்லப்படக்கூடும் என்று அனைத்துலக நாடுகளும் உதவி அமைப்புகளும் இஸ்ரேலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் இருந்து மக்களைக் காப்பாற்றும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளதாக பிரதமர் நெட்டன்யாகு அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், மீட்கப்படும் மக்கள் எங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவர் என்பது குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.

எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கப் பேராளர்களுடன் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேராளர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாக நடந்துவரும் போரில், காஸாவின் வடக்குப் பகுதியில் வாழ்வோர் தண்ணீர், உணவு, தங்குமிடம் என அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பொருள்கள் கிடைக்காமல் வடக்குப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் காஸாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
காஸாஇஸ்‌ரேல்