காஸா: நிவாரண உதவிபெறச் சென்ற 100க்கு மேற்பட்டோர் சுட்டுக்கொலை

2 mins read
9666cbfb-75ea-4e0b-b0ad-9eb0173ac570
நிவாரண உதவிபெற வரிசையில் காத்திருந்த பாலஸ்தீனர்கள் 100க்கு மேற்பட்டோரை இஸ்‌ரேலியப் படையினர் சுட்டுக்கொன்றதாக காஸா அதிகாரிகள் கூறுகின்றனர். அதை மறுத்த இஸ்ரேல், நிவாரணப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் அவர்கள் மீது ஏறியதால் பாலஸ்தீனர்கள் மாண்டதாகக் கூறுகிறது. - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: காஸாவில் பிப்ரவரி 29ஆம் தேதி நிவாரண உதவிபெற வரிசையில் காத்திருந்த பாலஸ்தீனர்கள் 100க்கு மேற்பட்டோரை இஸ்‌ரேலியப் படையினர் சுட்டுக்கொன்றதாக காஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதை மறுத்த இஸ்ரேல், நிவாரணப் பொருள் ஏற்றிவந்த லாரிகளைச் சுற்றி கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறியது. தள்ளுமுள்ளில் மிதிபட்டும், கூட்டத்தினர் மீது லாரி ஏறியதாலும் அந்தப் பாலஸ்தீனர்கள் மாண்டதாக அது கூறுகிறது.

அச்சம்பவத்தில் ஏறத்தாழ 112 பேர் மாண்டதாகவும் மேலும் 280க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் பொதுமக்கள் ஆக அதிக எண்ணிக்கையில் உயிரிழந்த சம்பவமாக அது கருதப்படுகிறது.

சண்டை நிறுத்தம், பிணைபிடிக்கப்பட்ட இஸ்‌ரேலியர்களை விடுவித்தல் ஆகிய அம்சங்கள் தொடர்பில் கத்தாரில் நடைபெறும் சமரசப் பேச்சை அச்சம்பவம் பாதிக்கக்கூடும் என்று ஹமாஸ் தரப்பு கூறியுள்ளது.

போர் தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகிவிட்ட நிலையில் மரண எண்ணிக்கை 30,000ஐத் தாண்டிவிட்டதாக பாலஸ்தீனச் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த எண்ணிக்கை தவறு என்று இஸ்ரேல் மறுக்கிறது.

நிவாரணப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் தனியார் குத்தகையாளர்களுக்குச் சொந்தமானவை என்று கூறிய இஸ்ரேலிய ராணுவம், கடந்த நான்கு நாள் இரவு வேளைகளில் நிவாரணப் பொருள் விநியோகத்தை மேற்பார்வையிட்டதாகக் கூறியது.

சில 100 மீட்டர் இடைவெளியில் இரு சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறிய இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், முதலாவதில் லாரிகளைச் சுற்றி கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றார். அதில் மிதிபட்டு அல்லது லாரி அவர்கள்மேல் ஏறியதில் 20க்கு மேற்பட்டோர் மாண்டனர் அல்லது காயமடைந்தனர் என்றார் அவர்.

இரண்டாவது சம்பவம், லாரிகள் கிளம்பத் தொடங்கியபோது நிகழ்ந்தது. கூட்டத்தினர் சிலர் இஸ்ரேலியத் துருப்பினரை நெருங்கினர். அச்சுறுத்தலுக்குள்ளானதாகக் கருதிய துருப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சிலர் மாண்டனர்; எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர். காஸா அதிகாரிகள் குறிப்பிடும் எண்ணிக்கையை அவர் மறுத்தார்.

குறிப்புச் சொற்கள்
காஸாஉயிரிழப்புநிவாரணம்