பங்ளாதேஷ் தீ விபத்தில் 46 பேர் பலி

பங்ளாதேஷ் தீ விபத்தில் 46 பேர் பலி

2 mins read
f781fd2c-9344-47cb-afe4-198e135e9db5
டாக்கா நகரின் பெய்லி சாலையில் தீவிபத்து நிகழ்ந்த வணிகக் கட்டடத்திற்கு வெளியே திரண்டுள்ள மக்கள் கூட்டம். - படம்: இபிஏ
multi-img1 of 4

டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஆறு மாடிக் கட்டடம் ஒன்றில் தீ மூண்டதில் ஏறக்குறைய 46 பேர் மாண்டனர்.

சம்பவத்தில் மேலும் 22 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் டாக்டர் சமந்தா லால் சென் தெரிவித்தார்.

பிப்ரவரி 29ஆம் தேதி பின்னேரத்தில் பெய்லி ரோட்டிலுள்ள புகழ்பெற்ற பிரியாணிக் கடையில் தீ மூண்டதாகவும் அது விரைவில் பரவியதாகவும் தீயணைப்புத் துறையினர் கூறினர்.

காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த அமைச்சர், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

தீ மூண்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடிய தீயணைப்பாளர்கள் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.

உயிர்பிழைத்தவர்களில் ஒருவரான முகம்மது அட்லஃப் என்பவர் விவரிக்கையில், “முன்புறம் தீப்பற்றி, சன்னல் உடைந்ததும் எங்கள் காசாளரும் ஊழியர் ஒருவரும் மற்றவர்களை வெளியேற்றினர். ஆனால், அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். நான் சமையலறைக்குச் சென்று, சன்னலை உடைத்து வெளியேறினேன்,” என்றார்.

அந்தக் கட்டடத்தில் பல உணவகங்களும், துணிக்கடைகளும், கைப்பேசிக் கடைகளும் செயல்பட்டு வந்தன.

தீ விபத்து நிகழ்ந்த நேரத்தில் பலரும் குழந்தைகள் உட்பட தங்கள் குடும்பத்தாரும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

மூச்சுத்திணறலால் பலர் மாண்டுவிட்டனர் என்றும் சிலர் தப்பிக்க நினைத்து, மேலிருந்து குதித்ததால் உயிரைவிட்டனர் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில், எரிவாயுக் கசிவால் தீப்பிடித்திருக்கலாம் என்று பங்ளாதேஷ் தீயணைப்பு, குடிமைத் தற்காப்பு இயக்குநர் மைன் உத்தீன் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு தளத்திலும், ஏன் மாடிப்படிகளிலும் எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்ததால் இது ஓர் அபாயகரமான கட்டடமாக இருந்தது,” என்றார் அவர்.

இதனிடையே, தீ விபத்து குறித்து விசாரிக்க ஐவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்