ரமலானுக்கு முன்பு போர் நிறுத்தம்; பைடன் நம்பிக்கை

ரமலானுக்கு முன்பு போர் நிறுத்தம்; பைடன் நம்பிக்கை

2 mins read
18194079-d5c6-4453-9fdf-689561093078
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை விமானங்கள் மூலமாக விநியோகிக்கும் திட்டம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். - கோப்புப் படம்: இபிஏ

வாஷிங்டன்: இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்திற்கு முன்பு இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காஸாவில் நிவாரண உதவி பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவின் போர் நிறுத்த நம்பிக்கை வெளியாகியுள்ளது.

“நாங்கள் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது. அமெரிக்கா அதனைச் செய்யும்,” என்று வெள்ளை மாளிகையில் இத்தாலிய பிரதமருடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“வரப்போகும் நாள்களில் ஜோர்தான் மற்றும் இதர நண்பர்களிடம் சேர்ந்து விமானங்கள் வழியாக கூடுதல் உணவு, நிவாரணப் பொருள்களை வழங்கவிருக்கிறோம்,” என்றும் 81 வயது ஜோ பைடன் கூறினார்.

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில் நிவாரணப் பொருள்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

கெய்ரோ- காஸா போர்நிறுத்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) கெய்ரோவில் மீண்டும் தொடங்க உள்ளது. இதனை இரண்டு எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் சனிக்கிழமை அன்று உறுதிப்படுத்தின.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மார்ச் 10ஆம் தேதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் எகிப்து மற்றும் கத்தார் உதவியுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வரும் இஸ்ரேலும் ஹமாசும் உடனடியாக இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ரமலான் மாதத்தையொட்டி மார்ச் 10 அல்லது 11ஆம் தேதி தொடங்கி ஆறு வார காலத்திற்கு சண்டை நிறுத்தம் ஏற்படும் என்று தாம் நம்புவதாக திரு பைடன் கூறியுள்ளார்.

வியாழனன்று 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் தெரிவித்தது. இந்தச் சம்பவத்தால் பேச்சுவார்த்தை மெது வடையவில்லை, மாறாக பேச்சுவார்த்தை விரைவுபடுத்தப்பட்டது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஸாவில் நாளுக்கு நாள் மனிதாபிமான உதவிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

அதே சமயத்தில் முக்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

மிரட்டலாக இருந்ததால் கூட்டத்தினர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக இஸ்ரேலிய வட்டாரம் ஒன்று பின்பு ஒப்புக்கொண்டது.

“பயங்கரமான போரில் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க முடியாமல் அப்பாவி மக்கள் சிக்கிக் கொண்டனர்,” என்று பைடன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்