வாஷிங்டன்: சிங்கப்பூரின் சில அமைச்சுகளுடன் சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதர் ஜானத்தன் கெப்லனுக்கு சீரான உறவு இருக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் தலைமை ஆய்வாளர் அலுவலகம் மார்ச் 1ல் அறிக்கை வெளியிட்டது.
இதனால் அமெரிக்காவின் அரசதந்திர இலக்குகள் தடைப்பட்டதாக அது கூறியது.
இதையடுத்து, திரு கெப்லனின் செயல்திறன், நடத்தை ஆகியவை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் திரு கெப்லன் உறுதி அளித்துள்ளார்.
“அமெரிக்க வெளியுறவு அமைச்சின் தலைமை ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையுடன் உடன்படுகிறேன். இதுகுறித்து தீர்வு காண நானும் எனது குழுவினரும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்,” என்று திரு கெப்லன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க சட்டப்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சின் தலைமை ஆய்வாளர் அலுவலகம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் செயல்பாடுகளைக் கட்டாயமாக ஆய்வு செய்ய வேண்டும்.
இருப்பினும், சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் குறித்த ஆய்வு ஆகக் கடைசியாக 2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
ஆவணங்கள், ஆய்வுகள், தூதரக ஊழியர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நேர்காணல், தூதரகக் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு தூதரகத்தின் செயல்பாடு குறித்து முடிவெடுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஏதேனும் விவகாரங்கள் எழுந்தால் அவற்றைக் கையாளத் தூதர் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஆனால் திரு கெப்லன் அவ்வாறு இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, அவர் வெளியிட்ட அறிக்கைகள் ஆக்கபூர்வமானதாக இருக்கவில்லை என்று அறிக்கை தெரிவித்தது.
திரு கெப்லன் வகுத்த திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்ற முடியாதவையாக இருந்ததாகவும் தூதரகத்தின் வளங்களை அவர் தேவையான பணிகளுக்குப் பயன்படுத்தாமல் வேறு விவகாரங்களுக்குப் பயன்படுத்தியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தூதரக ஊழியர்கள் முக்கிய கடமைகளில் கவனம் செலுத்த முடியாதபடி அவரது செயல்பாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சுடன் கூடுதல் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என்பதே தங்களுடைய கருத்து என்று அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் தலைமை ஆய்வாளர் அலுவலகத்திடம் தெரிவித்தனர்.
ஆனால் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சுடனான கலந்துரையாடல்கள் ஆக்கபூர்வமற்றவையாக இருந்ததாக திரு கெப்லன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஊடகத்துடனும் அவர் அவ்வளவாகத் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

