கட்சி நியமனம் நோக்கி முன்னேறும் டிரம்ப்; மூன்று மாநில வாக்கெடுப்பில் வெற்றி

2 mins read
16f0a46f-6353-4a63-93ee-6b04ae62de13
அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (மார்ச் 2) அன்று குடியரசு கட்சி சார்பாக அதிபர் பதவிக்கு நியமனம் பெறுவதில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

அவர் தமது குடியரசுக் கட்சியின் உட்கட்சித் வாக்கெடுப்பில், மிசூரி, மிச்சிகன், இடாகோ ஆகிய மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளளதாக அமெரிக்க ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அவர் கட்சி முன்னோடி வாக்கெடுப்பில் பங்குபெற்ற அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இனி அடுத்த வாரம் 15 மாநிலங்களில் நடைபெறும் ‘சூப்பர் டியூஸ்டே’ எனப்படும் கட்சி முன்னோடி வாக்கெடுப்பில் பங்கு பெறுவார். அவரது குடியரசுக் கட்சி எதிர்வரும் ஜூலையில் அதிபர் தேர்தல் வேட்பாளைரைத் தேர்வு செய்யும் கட்சி மாநாட்டைக் கூட்டும். அதில் பெரும்பாலும் அவர்தான் குடியரசுக் கட்சி வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் டிரம்ப் தற்போதைய அதிபர் ஜோ பைடனை அதிபர் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நேர்ந்தால் அது அவ்விருக்கும் இடையே நிகழும் இரண்டாவது நேரடிப் போட்டியாக விளங்கும் என்பது நினைவுகூரத்தக்கது.

முன்னாள் அதிபர் டிரம்புக்கு கட்சியில் பெரும் செல்வாக்கு இருந்தபோதிலும் சனிக்கிழமை மிசூரி, மிச்சிகன், இடாகோ ஆகிய மூன்று மாநில வாக்கெடுப்பு கட்சிக்குள் இருக்கும் பிரிவை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மிசூரியில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் டிரம்ப் தன்னை எதிர்த்துக் களத்தில் இருக்கும் முன்னாள் தெற்கு கேரோலினா மாநில ஆளுநரை வெற்றி கொண்டார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது.

மிச்சிகன் மாநிலத்தில் கிட்டத்தட்ட 2,000 கட்சி ஆர்வலர்கள் வாக்கெடுப்பல் பங்கேற்ற நிலையில் கட்சி மாநாட்டுக்கு செல்லும் 39 பேராளர்களையும் டிரம்ப் வளைத்துப் பிடித்துள்ளார் என்று சிஎன்என் செய்தித் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்