அபுதாபி: உலக வர்த்தக நிறுவனம், இணைய வர்த்தக வரிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதை ஈராண்டுகளுக்கு நீட்டிக்க இணங்கியுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற நிறுவனத்தின் 13வது அமைச்சர்நிலைக் கருத்தரங்கில் மார்ச் 1ஆம் தேதி 16 மணிநேரம் நீடித்த பேச்சுகளுக்குப் பிறகு அது சாத்தியமாகியுள்ளது.
இருப்பினும் வேளாண், மீன்வள மானியங்கள் மீதான ஒடுக்குமுறை உள்ளிட்ட மற்ற வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் இணக்கம் காணப்படவில்லை.
புவிசார் அரசியல் குழப்பங்களால் நிலைகுலைந்துள்ள உலகில், மீள்திறனுக்கான ஆதாரமாக உலக வர்த்தக நிறுவனம் விளங்குவதாக அதன் தலைமை இயக்குநர் இங்கோஸி ஒகோஞ்சோ-இவியேலா கூறியுள்ளார்.
கருத்தரங்கின் நிறைவு நாளில் உரையாற்றிய அவர், இன்னும் தீர்வுகாணப்படாத வர்த்தக விவகாரங்கள் குறித்துத் தொடர்ந்து கலந்துரையாடி, தீர்வுகாணுமாறு ஊக்குவித்தார்.
முக்கியப் பொருளியல்கள் சிலவற்றில் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பது கூடுதல் சவாலாகக் கருதப்படுகிறது. பிரசல்ஸ் முதல் புதுடெல்லி வரை விவசாயிகள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் போன்றோரிடமிருந்து ஆட்சியாளர்களுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், “நாம் அடைய நினைத்த அனைத்தையும் எட்டாவிடினும் தற்போது நாம் அடைந்துள்ள இலக்குகள் சிறப்பானவை என்று கருதுகிறேன்,” என்றார் டாக்டர் ஒகோஞ்சோ-இவியேலா.
அக்கருத்தரங்கில் சிங்கப்பூர் சார்பில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
முதல்முறை நடைபெற்ற வர்த்தகம், நீடித்த நிலைத்தன்மையான மேம்பாடு ஆகியவை தொடர்பான அமைச்சர்நிலைக் கலந்துரையாடலுக்கு அவர் தலைமை வகித்தார்.
விதிமுறைகளின் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறைக்கு சிங்கப்பூரின் வலுவான ஆதரவை அமைச்சர் கான் மீண்டும் வலியுறுத்தினார்.
“உறுப்பு நாடுகள் கூட்டுத் தலைமைத்துவ நடைமுறையைக் கடைப்பிடிப்பது தொடர்பில் இணைந்து பணியாற்றுவதைத் தொடரவேண்டும். வருங்காலத் திட்டங்களை வரையறுத்து, உலக வர்த்தக நிறுவனம் காலத்திற்குப் பொருத்தமாகவும் அது உருவான நோக்கத்திற்கு ஏற்ப செயல்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, இணைய வர்த்தக வரி அமலாக்கம் 2026 மார்ச் 31ஆம் தேதி வரை தள்ளிப்போடப்பட்டதை அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. உலகப் பொருளியல்கள் இதனால் நன்மையடையும் என்று அது கூறியது.

