தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாதீர் ஆட்சிக்காலத்தில் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதியாதரவு தொடர்பில் ஊழல் ஒழிப்புப் பிரிவு விசாரணை

2 mins read
4563d7f5-e06f-472a-8005-bf92eea007ab
டாக்டர் மகாதீர் முகமது (இடம்), திரு தயிம் ஸைனுதீன். - கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் நிதியமைச்சர் தயிம் ஸைனுதீன், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதின் மகன்கள் இருவர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்திவந்த ஊழல் ஒழிப்புப் பிரிவு தற்போது அதன் கவனத்தை வேறுபக்கம் திருப்பியுள்ளது.

1997ஆம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அவ்விரு தலைவர்களுடன் அரசியல் ரீதியாகத் தொடர்புகொண்டிருந்த வர்த்தகர்கள் நொடித்துப் போகாமல் பாதுகாக்க அரசாங்கம் நிதியாதரவு வழங்கியது தொடர்பில் எழுந்த சில சர்ச்சைகளில் அது கவனம் செலுத்துகிறது.

அந்தப் பட்டியலில் முன்னிலையில் இருப்பது டாக்டர் மகாதீரின் மூத்த மகன் மிர்ஸான் மகாதீரின் கட்டுப்பாட்டில் இருந்த கப்பல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதியாதரவு தொடர்பான விசாரணை என்று அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது.

கடன் சுமையால் தத்தளித்த அந்த நிறுவனத்தை 1998 மார்ச்சில் மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பெட்ரோனாஸ் நிறுவனம் 836 மில்லியன் ரிங்கிட் (176 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

திரு மிர்ஸானுக்குச் சொந்தமாயிருந்த நிறுவனம் தொடர்பிலான விசாரணையால் டாக்டர் மகாதீருக்குச் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

மலேசியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது பெட்ரோனாஸ். திரு மிர்ஸானின் நிறுவனக் கடன் சிக்கலைக் காப்பாற்ற அது நடவடிக்கை மேற்கொண்டபோது டாக்டர் மகாதீர் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார்.

பட்டியலில் இடம்பெறும் மற்றொன்று, 2000ஆம் ஆண்டில் வர்த்தகர் தாஜுதீன் ரம்லிக்கு வழங்கப்பட்ட 1.79 பில்லியன் ரிங்கிட் நிதியாதரவு.

அவர் அப்போது மலேசியன் ஏர்லைன்ஸ் சிஸ்டம் (எம்ஏஎஸ்) எனும் அரசாங்க விமான நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளுக்கு உரிமையாளராக இருந்தார்.

அந்த வழக்கு விசாரணை, முன்னாள் நிதியமைச்சர் தயீம் மீது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தற்போது நடத்தும் விசாரணையுடன் தொடர்புடையது.

சொத்து மதிப்பை வெளியிடக் கோரி ஆணையம் அனுப்பிய அறிக்கைக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் கடந்த ஜனவரி மாதம் திரு தயீம் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்