தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்கடலில் சென்ற கப்பல் மீது ஹூதி தாக்குதல்; மூவர் மரணம்

2 mins read
b39a5b0a-6b4a-4d9b-b218-2bfbb9d99fe9
தாக்கப்பட்ட ட்ரூ கான்ஃபிடன்ஸ் கப்பலில் (2022ல் எடுக்கப்பட்ட படம்) சிப்பந்திகள், பாதுகாவல் பணியாளர்கள் என பிலிப்பினோ நாட்டைச் சேர்ந்த 15 பேர், வியட்னாமியர்கள் நால்வர், இலங்கையைச் சேர்ந்த இருவர், இந்தியர் ஒருவர், நேப்பாளி ஒருவர் இருந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: செங்கடலில் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல் மீது மார்ச் 6ஆம் தேதி, ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று கடலோடிகள் மாண்டதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்துள்ளது.

ஏடன் துறைமுகத்திலிருந்து கிட்டத்தட்ட 50 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த ‘ட்ரூ கான்ஃபிடன்ஸ்’ எனும் அக்கப்பல், தாக்குதலை அடுத்து தீப்பிடித்துக்கொண்டது.

ஈரான் ஆதரவுடன் செயல்படும், ஏமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் அண்மைக் காலமாக நடத்திவரும் தாக்குதல்களில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது இது முதல்முறை.

அந்தத் தாக்குதலுக்கு ஹூதி அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

அதையடுத்து,“அப்பாவிக் கடலோடிகள் குறைந்தது இருவர் பலியாகிவிட்டனர். வருத்தத்துக்குரிய இச்சம்பவம், ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பற்ற முறையில் அனைத்துலகக் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதலின் பின்விளைவு. இத்தகைய தாக்குதல்களை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்று பிரிட்டிஷ் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

சென்ற ஆண்டு (2023) நவம்பர் மாதத்திலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

காஸா போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவ்வாறு தாக்குதல் நடத்துவதாக ஹூதி அமைப்பு கூறுகிறது.

பிரிட்டனும் அமெரிக்காவும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது பதில் தாக்குதல் நடத்துகின்றன. தற்போது உயிர்ச் சேதம் ஏற்பட்டிருப்பதால் வலுவான ராணுவ நடவடிக்கைக்கு நெருக்குதல் தரப்படலாம் என்று கருதப்படுகிறது.

‘ட்ரூ கான்ஃபிடன்ஸ்’ கப்பல் மீதான தாக்குதலில் சிப்பந்திகள் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் கப்பலுக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க மத்திய தளபத்தியம் கூறியது.

கப்பல் தீப்பிடித்துக்கொண்டதாகவும் தண்ணீரில் தத்தளிப்பதாகவும் அக்கப்பலை இயக்கும் கிரேக்க நிறுவனம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
ஹூதிதாக்குதல்உயிரிழப்பு