உறவு மேம்பட்டாலும் அமெரிக்காவின் மனப்போக்கில் மாற்றமில்லை: சீனா

1 mins read
68f126a1-7974-4f5e-9d56-03e80cc75624
வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசினார். - படம்: இபிஏ

பெய்ஜிங்: உறவுகள் மேம்பட்டாலும் அமெரிக்காவின் மனப்போக்கில் மாற்றமில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்து உள்ளார்.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க-சீன உறவில் முன்னேற்றம் காணப்பட்டபோதிலும் அமெரிக்கா தனது வாக்குறுதிகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் சீனா மீதான அதன் தவறான கண்ணோட்டம் மாறவில்லை என்றும் அவர் வியாழக்கிழமை (மார்ச் 7) கூறினார்.

பெய்ஜிங் நகரில் வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில் திரு வாங் பேசினார்.

2023 நவம்பர் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற உச்சநிலைக் கூட்டத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொண்ட பிறகு அமெரிக்க-சீன உறவில் நிலைத்தன்மைக்கான அறிகுறி தென்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“இருப்பினும், வர்த்தகத் தடை முதல் தொழில்நுட்பத் தடை வரையிலான அடிப்படை அம்சங்களில் கருத்துவேறுபாடுகள் இன்னும் களையப்படவில்லை. இருநாடுகளும் ஒன்றையொன்று உத்திபூர்வ போட்டியாளராகப் பார்க்கின்றன.

“சீனாவை நசுக்குவதற்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து புதிய வடிவம் கண்டுவருகின்றன. சீனா மீதான ஒருதலைபட்சத் தடைகளின் பட்டியல் தொடர்ந்து நீடிக்கிறது.

“சீனா மீது தவறான முத்திரைகளைப் பதிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் புரிந்துகொள்ள முடியாத நிலையை எட்டி உள்ளன.

“சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா தொடர்ந்தால் வல்லரசின் நம்பகத்தன்மையை எப்படிப் பெறமுடியும்.

“உயர் மதிப்புள்ள விநியோகத் தொடரில் ஏகாதிபத்தியத்தை திணிக்கும் அமெரிக்கா, சீனாவை கீழ்மட்டத்தில் நீடிக்கவே அனுமதிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நியாயமான போட்டி எங்கிருந்து வரும்?,” என்று திரு வாங் கேள்விகளை அடுக்கினார்.

குறிப்புச் சொற்கள்