மஸ்க்: அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இருவருக்கும் நன்கொடை வழங்க மாட்டேன்

மஸ்க்: அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இருவருக்கும் நன்கொடை வழங்க மாட்டேன்

2 mins read
74e1af6d-6a21-494d-a893-04d728f5c355
எலோன் மஸ்க். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: பெரும் செல்வந்தர் எலோன் மஸ்க், இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப், தற்போதைய அதிபரான ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இருவருக்கும் நன்கொடை வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஃபுளோரிடா மாநிலத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த மறுநாள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு மஸ்க் அவ்வாறு கூறினார்.

சென்ற வார இறுதியில் திரு டிரம்ப், சில நபர்களுடன் சேர்ந்து திரு மஸ்கை சந்தித்ததை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

திரு டிரம்ப், தமது தேர்தல் பிரசாரத்துக்கு பெரிய அளவில் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதை முன்னிட்டு அவர், திரு மஸ்கை சந்தித்தார். திரு மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 192 பில்லியன் டாலர் (257 பில்லியன் வெள்ளி) என்று புளூம்பர்க் பெரும் செல்வந்தர் குறியீடு (புளூம்பர்க் பில்லியனேர் இன்டெக்ஸ்) கணித்திருக்கிறது.

“அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இருவருக்கும் நான் நன்கொடை வழங்கப்போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தனக்குச் சொந்தமான எக்ஸ் சமூக ஊடகத்தில் திரு மஸ்க் பதிவிட்டார். எனினும், அரசியல் ரீதியான மற்ற நடவடிக்கைகளுக்கு நன்கொடை வழங்குவதை அவரின் கருத்துகள் மறுக்கவில்லை.

மற்ற பெரும் செல்வந்தர்களைப் போல் திரு மஸ்க், அரசியலில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதில்லை. 2009ஆம் அண்டு முதல் ஒரு மில்லியன் டாலருக்கும் குறைவான தொகையையே அவர் நன்கொடையாக வழங்கியிருப்பதாக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

திரு மஸ்க்கின் அறிவிப்பு திரு டரம்ப்புக்குச் சவாலாக அமையக்கூடும். தேர்தல் பிரசாரத்துக்கென அவரிடம் தற்போது 30.4 மில்லியன் டாலர் மட்டுமே உள்ளது. அதேவேளை, திரு பைடனிடம் 130 மில்லியன் டாலர் இருப்பதாக மத்திய அரசுப் புள்ளி விவரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்