தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை குடும்பம் மீது கத்திக்குத்துத் தாக்குதல்; நான்கு சிறார் உட்பட அறுவர் மரணம்

2 mins read
482bb63a-e371-420c-b116-439fb1d845b8
இச்சம்பவம் கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் நிகழ்ந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஒட்டாவா: கனடாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தில் நான்கு சிறுவர்களும் இரண்டு பெரியவர்களும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.

தலைநகர் ஒட்டாவாவில் இருக்கும் வீடு ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்தது. மாண்டோரில் ஒரு மாதும் அவரின் நான்கு பிள்ளைகளும் அடங்குவர். அந்த வீட்டில் வசித்த வேறோர் ஆடவரும் கொல்லப்பட்டார்.

இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர்களைக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. 19 வயது ஃபெப்ரியோ டி-ஸொய்சா எனும் மாணவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.

அந்த ஆடவரும் அவ்வீட்டில் வசித்து வந்தார்.

புதன்கிழமை (மார்ச் 6) இரவு 11 மணியளவில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அதற்கு சிறிது நேரம் கழித்து ஸொய்சா கைது செய்யப்ட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 30 ஆண்டு காலத்தில் இதுவே ஒட்டாவாவில் பலர் கொல்லப்பட்ட ஆக மோசமான சம்பவம் என்று அந்நகர காவல்துறைத் தலைவர் எரிக் ஸ்டப்ஸ் குறிப்பிட்டார்.

கொல்லப்பட்ட மாது 35 வயது திருவாட்டி தர்‌ஷனி பன்பாரநாயக காமா வல்வே தர்‌ஷனி திலந்திகா ஏகன்யகே என்று அடையாளம் காணப்பட்டார். கொல்லப்பட்ட அவரின் பிள்ளைகள் ஏழு வயது இனுக்கா விக்ரமசிங்க எனும் சிறுவன், நான்கு வயது அ‌ஷ்வினி விக்ரமிசிங்க எனும் சிறுமி, ரினியானா விக்ரமசிங்க எனும் இரண்டு வயது சிறுமி, கெலி விக்ரமசிங்க எனும் இரண்டு மாதக் குழந்தை ஆகியோர் ஆவர்.

மோசமான தாக்குதல்களுக்கு ஆளான பிள்ளைகளின் தந்தை மருத்துவமனையில் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தந்தையின் பெயரைக் காவல்துறை வெளியிடவில்லை. எனினும், நீதிமன்ற ஆவணங்களில் அவர் பெயர் தனு‌ஷ்கா விக்ரமசிங்க என்று குறிப்பிடப்பட்டது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறாவது நபரான 40 வயது அமரக்கூன்முபியன்சேல கி காமினி அமரக்கூன், அக்குடும்பத்துக்குத் தெரிந்தவராவார். இலங்கையிலிருந்து வந்த அவர் அக்குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கூரான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காவல்துறை கூறியது. ஆனால், மேல்விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்