டிரம்ப்பைச் சாடிய பைடன்

2 mins read
00defa8d-bd1e-416c-84de-bfd117cc7fd9
நாட்டு நடப்பு பற்றிய உரையில் திரு டிரம்ப்பைச் சாடினார் அமெரிக்க அதிபர் பைடன். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: திரு டோனல்ட் டிரம்ப், ர‌ஷ்யாவுக்கு அடிபணிவதாகவும் ஜனநாயக முறைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சாடியுள்ளார்.

அதோடு, அமெரிக்கா எதிர்நோக்கும் குடிநுழைவுப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு வரையப்பட்ட மசோதாவைப் பற்றி திரு டிரம்ப் குறை கூறுகிறார் என்றும் திரு பைடன் சொன்னார். வியாழக்கிழமை (மார்ச் 7) நடைபெற்ற அமெரிக்க நாட்டு நடப்பு பற்றிய உரையில் திரு பைடன் அவ்வாறு எடுத்துரைத்தார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 81 வயது பைடன், 68 நிமிடங்களுக்கு உரையாற்றினார். இவ்வாண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப் அவரை எதிர்த்துப் போட்டியிடுவார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டது. அதன் தொடர்பிலான உண்மைகளை திரு டிரம்ப் மூடி மறைப்பதாக திரு பைடன் சாடினார். மேலும், ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு திரு டிரம்ப் அடங்கிப் போவதாகவும் அவர் குறை கூறினார்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் கட்டுப்பாடுகளை முடுக்கிவிட வகைசெய்யும் மசோதாவை திரு டிரம்ப் செயல்படுத்த விடாமல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டையும் திரு பைடன் முன்வைத்தார்.

திரு டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் தாக்கிப் பேசினார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஜனநாயக முறைக்கு அபாயம் இருப்பதாகக் கூறி திரு பைடன் தமது உரையைத் தொடங்கினார். நேட்டோ உறுப்பு நாடுகள் தற்காப்புக்காகக் கூடுதலாகச் செலவு செய்யாதிருந்தால் அவற்றின்மீது படையெடுக்குமாறு திரு டிரம்ப், திரு புட்டினிடம் கூறியதை திரு பைடன் சாடினார்.

இதற்கிடையே, ட்ரூத் சோ‌ஷியல் எனும் சமூக ஊடகத்தில் 77 வயது டிரம்ப், தமது கணக்கில் திரு பைடனைத் தாக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டார்.

“அவர் பேசும்போது மிகவும் கோபமாக இருப்பதுபோல் தென்பட்டது. பொதுவாக தோற்றுப்போகிறோம் என்பதை உணர்பவர்களின் குணாதிசயம் அது,” என்று திரு டிரம்ப் பதிவிட்டார். “நமது நாட்டை ஒன்றுபட்டு மீட்க ஆத்திரப்படுவதும் கத்துவதும் உதவாது,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்