காஸாவிற்கு நிவாரணப் பொருள்களைக் கடல்வழியாக அனுப்பத் திட்டம்

2 mins read
efda65f6-a28c-4785-ad0a-f77cfbfa1dd2
காஸாவில் மார்ச் 8ஆம் தேதி வான்குடைகளுடன் இணைத்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள். - படம்: ஏஎஃப்பி

காஸா: காஸாவிற்கு மனிதநேய நிவாரணப் பொருள்களைக் கடல்வழியாக அனுப்பும் அனைத்துலக முயற்சி மும்முரமடைந்துள்ளது.

காஸா எல்லைப் பகுதியில் ஐந்து மாதங்களாகப் போர் நீடிப்பதால் அவதியுறும் மக்களுக்கு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருள்களைச் சில நாடுகள் அண்மையில் வழங்கின.

மார்ச் 8ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட அத்தகைய முயற்சி சிலரைப் பலிவாங்கியது.

வான்குடை சரியாகச் செயல்படாததால், அகதிகள் முகாமைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஐவர் உயிரிழந்ததாகவும் மேலும் பத்துப் பேர் காயமடைந்ததாகவும் அல்-ஷிஃபா மருத்துவமனைத் தலைமைத் தாதி கூறினார்.

‘மாவு மூட்டை’ கிடைக்குமென்ற நம்பிக்கையில் தன் சகோதரருடன் வான்குடை நிவாரண உதவியைப் பெறச் சென்றதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஏஎஃப்பி நிறுவனத்திடம் கூறினார்.

திடீரென்று செயலிழந்த வான்குடை, ஒரு வீட்டின் கூரையில் விழுந்ததாக அவர் சொன்னார்.

தங்களது விமானங்களால் உயிரிழப்பு நேரவில்லை என்று ஜோர்தானும் அமெரிக்காவும் கூறுகின்றன. பெல்ஜியம், எகிப்து, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகியவையும் விமானம் வழியாக நிவாரணப் பொருள்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, நிவாரணப் பொருள்களைக் கடல்வழியாக சைப்ரசிலிருந்து காஸாவிற்கு அனுப்புவதற்கான கடல் பாதை மார்ச் 10ஆம் தேதி திறக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சோதனை நடவடிக்கையாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் நிவாரணப் பொருள்கள், மார்ச் 8ஆம் தேதி அந்தப் பாதையில் அனுப்பப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

நிவாரணப் பொருள்களைக் கொண்டுவருவதற்காக காஸா கரைக்கருகே தற்காலிகப் படகு நிறுத்துமிடத்தை அமெரிக்க ராணுவம் கட்டுமென்று மார்ச் 7ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வேளையில், வான் வழியாகவோ கடல் வழியாகவோ நிவாரணப் பொருள்களை அனுப்புவது, நிலம் வழியாக அவற்றை அனுப்புவதற்கு மாற்றாக அமையாது என்றும் கூடுதலான நிவாரண உதவி லாரிகள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
காஸாநிவாரணம்உயிரிழப்பு