வாஷிங்டன்: காஸா போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அணுகுமுறை அந்நாட்டுக்கு உதவுவதைவிட அதிக தீங்கையே விளைவிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று (மார்ச் 9) ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் திரு பைடன் அவ்வாறு சொன்னார்.
திரு நெட்டன்யாகுவின் செயல்கள் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்பட்டு வருகிறது.
அந்த அதிருப்தி இப்போது வெளிப்படையாகத் தெரிவதாக நம்பப்படுகிறது.
“இஸ்ரேலைத் தற்காக்கவும் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பைக் குறிவைக்கவும் திரு நெட்டன்யாகுவுக்கு உரிமை உள்ளது,” என்றார் திரு பைடன்.
“தங்களின் நடவடிக்கைகளால் அப்பாவி மக்களின் உயிர் போவதில் அவர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“என்னைப் பொறுத்தவரை அவர் இஸ்ரேலுக்கு உதவுவதைவிட அதிக தீங்கைத்தான் விளைவிக்கிறார்,” என்று திரு பைடன் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவின் ராஃபா நகரை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று பேசப்பட்டது குறித்து திரு பைடன் முன்பின் முரணாகக் கருத்துரைத்தார்.
“எல்லை மீறக்கூடாது,” என்று அவர் சொன்னார்.
ஆனால், உடனடியாக, “நான் இஸ்ரேலை என்றும் கைவிடமாட்டேன். இஸ்ரேலைத் தற்காப்பது இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
“ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆகாயத் தற்காப்பு முறை இல்லாமல் செய்யும் அளவிற்கு எல்லை மீறப்படவில்லை,” என்றும் திரு பைடன் கூறினார்.
பிறகு மறுபடியும் மாற்றிப் பேசினார்.
“எல்லை உண்டு. 30,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது,” என்றார் திரு பைடன்.
காஸா போர் தொடர்பில் திரு பைடனின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் தென்பட்டாலும் இஸ்ரேலுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கவேண்டாம் என்று ஆர்வலர்கள் எழுப்பிவரும் குரலுக்கு அவரின் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று எதிர்பாராவிதமாக ஹமாஸ், இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 1,600 பேர் மாண்டனர்.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேல், காஸா மீது நடத்திய தாக்குதல்களில் 30,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார் என்று காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

