நடுவானில் சரிந்த விமானம்; கறுப்புப் பெட்டிகளைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நடுவானில் சரிந்த விமானம்; கறுப்புப் பெட்டிகளைக் கைப்பற்றியது நியூசிலாந்து

1 mins read
38a18279-1dad-4a7f-a079-304163e2ad7e
கோப்புப் படம்: - ராய்ட்டர்ஸ்

சிட்னி: சிட்னி நகரிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றுகொண்டிருந்த சிலியைச் சேர்ந்த ‘எல்ஏடிஏஎம் ஏர்லைன்ஸ்’ நிறுவன விமானம் திங்கட்கிழமை (மார்ச் 11) நடுவானில் திடீரென்று சரிந்ததில் 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்த போயிங் 787 ரக விமானத்தின் விமானிகள் அறையிலிருந்த கறுப்புப் பெட்டிகளைக் கைப்பற்றியிருப்பதாக நியூசிலாந்தின் போக்குவரத்து விபத்து விசாரணை ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இவ்விபத்து தொடர்பில் விசாரணை தொடங்கியுள்ளதாக சிலி அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக அது குறிப்பிட்டது.

அனைத்துலக வான்வெளியில் விபத்து நிகழ்ந்ததால் சிலி அதிகாரிகளும் விசாரணை நடத்துவதாக ஆணையம் கூறியது.

இவ்விசாரணையில் நியூசிலாந்து ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவதாக சிலி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விமானத்தின் குரல் பதிவு, தகவல் பதிவுப் பெட்டிகளிலிலிருந்து விமானம் சென்றுகொண்டிருந்த பாதை, விமானிகளுக்கு இடையிலான உரையாடல்கள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள இயலும்.

விசாரணையில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது. நியூசிலாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் தேவைப்பட்டால் விசாரணையில் ஒத்துழைக்க முன்வந்துள்ளது.

அந்த விமானத்தில் 263 பயணிகளும் ஒன்பது சிப்பந்திகளும் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்