செங்கடல் தாக்குதல்: உயிர் தப்பிய பிலிப்பீன்ஸ் நாட்டவர் நாடு திரும்பினர்

1 mins read
6f2519c5-b0aa-4449-8302-b42480d0606f
ஹூதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உயிர் தப்பியோர் பிலிப்பீன்ஸ் திரும்பினர். - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: ஏமனுக்கு அருகே உள்ள செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிர் தப்பிய பிலிப்பீன்ஸ் நாட்டவர் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) நாடு திரும்பினர்.

‘ட்ரூ கான்ஃபிடன்ஸ்’ என்றழைக்கப்படும் கப்பலின் ஊழியர்களான அவர்கள் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து பிலிப்பீன்ஸ் திரும்பினர். பார்பேடோஸ் நாட்டின் கொடியை ஏந்திய அக்கப்பலை கிரீஸ் இயக்கியது.

அந்தத் தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்கள்.

நாடு திரும்புவதற்காக உயிர் தப்பியோரில் 11 பேருக்கு அரசாங்கம் உதவியதென்று பிலிப்பீன்சின் வெளியாட்டு ஊழியர் அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

தாக்குதலில் மோசமான காயங்கள் ஏற்பட்ட மற்ற இரண்டு பிலிப்பீன்ஸ் நாட்டவர், ட்ஜிபூட்டி எனும் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். உடல்நிலை மேம்பட்ட பிறகு அவர்கள் மணிலாவுக்கு அழைத்து வரப்படுவர்.

குறிப்புச் சொற்கள்