பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் புதன்கிழமை (மார்ச் 13) அன்று மிகப் பெரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது.
இது எரிவாயு வெடிப்பு என சந்தேகிக்கப்படுகிறது. இதில்இருவர் மரணமடைந்தனர் என்றும் மேலும் 26 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல கட்டடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மைய காலத்தில் சீனாவில் பல கடுமையான விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவை பெரும்பாலும் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஸி ஜின் பிங் அதிகாரிகளை ஆழ்ந்து பரிசீலிக்குமாறு கூறியதுடன் இவற்றை தடுக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
புதன்கிழமை நடந்த இந்த வெடிப்பு சம்பவம் காலை 8.00 மணிக்கு சற்று முன்னர் என்று அரசு தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி தெரிவித்தது. வெடிப்பு நடந்த இடம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 50கிலோமீட்டர் கிழக்கே உள்ள ஹபெய் மாநிலத்தின் சான்ஹ நகரம் என்றும் அது தெரிவித்தது.
வெடிப்பு சம்வத்தில் இருவர் மரணமடைந்தனர் என்றும் 26 பேருக்கு காயம் என்றும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் விவரித்தது. கோழி இறைச்சி விற்கும் கடையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் வெடிப்பு ஏற்பட்டதாக அது கூறியது.
“பெரிய வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டது. அது என்னை பயத்தில் உறைய வைத்தது,” என்று உள்ளூர் ஈரச் சந்தையில் உள்ள ஓர் கடைக்காரர் கூறினார்.

