‘சிலாங்கூரில் விழுந்து நொறுங்கிய சிங்கப்பூர் விமானம் சரியாக கவனிக்கப்படவில்லை’

1 mins read
2681634c-fe28-4e07-8a31-d9b00094cba1
இச்சம்பவம் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்தது. - படம்: தி ஸ்டார் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வொர்க்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் விழுந்து நொறுங்கிய சிங்கப்பூர் விமானம் சரியாக கவனிக்கப்படாததற்கான ஆதாரத்தைத் திரட்டியுள்ளதாக மலேசிய ஆகாய விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள காப்பார் பகுதியில் சிங்கப்பூருக்குச் சொந்தமான விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அந்த விபத்தில் மலேசியர்கள் இருவர் மாண்டனர்.

சான்றிதழ் பெறாத அல்லது தவறான பாகங்கள், விழுந்து நொறுங்கிய பிகே 160 கேப்ரியல் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்ததாக புதன்கிழமையன்று (மார்ச் 13) ஏஏஐபி வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பறக்கும்போது அந்த விமானத்தின் எடை அதிகபட்சம் 850 கிலோகிராமாக இருக்கவேண்டும். ஆனால், பறக்கப் புறப்பட்டபோது எடை அதைத் தாண்டியதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக ஏஏஐபி குறிப்பிட்டது.

921.3 கிலோகிராம் எடையுடன் விமானம் புறப்பட்டதாக விசாரணை மேற்கொண்டோர் தெரிவித்தனர்.

அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 30 வயது விமானி டேனியல் யீ சியாங் கூனும் 42 வயது பயணி ரொ‌ஷான் சிங் ரானியாவும் கொல்லப்பட்டனர். யீ பினாங்கைச் சேர்ந்தவர், சிங் ஜோகூரிலிருந்து வந்தவர்.

குறிப்புச் சொற்கள்