துபாய்: ஹமாஸ் தரப்பு, காஸா சண்டை நிறுத்தம் தொடர்பான பரிந்துரையை சமரசப் பேச்சாளர்களிடம் சமர்ப்பித்துள்ளது.
முதற்கட்டமாக, பாலஸ்தீனக் கைதிகள் 700 முதல் 1,000 பேரை விடுவிப்பதற்கு ஈடாக, பிணைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண்கள், குழந்தைகள், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோரை விடுவிப்பதும் அந்தப் பரிந்துரையில் அடங்கும் என்று ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பரிந்துரையின்கீழ், இஸ்ரேலியச் சிறைகளில் ஆயுள்தண்டனையை நிறைவேற்றிவரும் பாலஸ்தீனர்கள் 100 பேரும், இஸ்ரேலின் ஆயுதப்படையில் சேர்க்கப்பட்ட பெண் ஊழியர்களும் விடுவிக்கப்படுவர்.
அந்தப் பரிந்துரைக்கேற்ப முதற்கட்டமாக, பிணைபிடிக்கப்பட்டோரும் கைதிகளும் விடுவிக்கப்பட்டால், அதன் பிறகு நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கான தேதிக்கு இணங்குவதாக ஹமாஸ் கூறுகிறது.
முதற்கட்ட பிணையாளிகள்-கைதிகள் விடுவிப்புக்குப் பின்னர், காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் மீட்டுக்கொள்ளப்படுவதற்கான காலக்கெடு தொடர்பில் இணக்கம் காணப்படும் என்று ஹமாஸ் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ், இருதரப்பிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று அது கூறியது.

