ஹாங்காங்: சீனாவில் கடந்த ஆண்டு அதிகமானோர் திருமணம் செய்துகொண்டது தெரியவந்து உள்ளது.
2023ஆம் ஆண்டில் அங்கு புதிதாக மணம் புரிந்தோர் எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 12.4 விழுக்காடு அதிகம்.
கடந்த பத்தாண்டு காலமாக சீனாவில் சரிந்து வந்த திருமணங்களின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தள்ளிப்போடப்பட்ட பல திருமணங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றன.
கடந்த ஆண்டு புதிதாக 7.68 மில்லியன் பேர் திருமணம் செய்துகொண்டனர்.
2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 845,000 தம்பதியினர் புதிதாக மணவாழ்க்கையில் அடி எடுத்து வைத்ததாக சீனாவின் குடிமை விவகார அமைச்சு கடந்த வாரம் தெரிவித்து இருந்தது.
இத்தனை மில்லியன் பேர் மணம் முடித்தாலும் 2013ஆம் ஆண்டு 13.47 மில்லியன் புதிய தம்பதியினர் மணம் புரிந்த சாதனை அளவை இந்த எண்ணிக்கை இன்னும் நெருங்கவில்லை.
குழந்தைப் பிறப்புக்கு ஏதுவான சமூகம், நீண்டகால மற்றும் சமச்சீர் மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவற்றுக்காக அரசாங்கம் பணியாற்றும் என்று சீனப் பிரதமர் லீ கெச்சியாங் இம்மாதம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மணம் புரிந்தோர் பற்றிய தரவுகள் வெளிவந்து உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பிரசவம், பிள்ளை வளர்ப்பு, குழந்தைகளுக்கான கல்வி ஆகியவற்றுக்கு ஆகும் செலவை அரசாங்கம் குறைக்க இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து, முதியோர் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருவதால், மக்கள்தொகை வீழ்ச்சியைத் தடுத்து, வளர்ச்சியாக அதனை மாற்ற கொள்கை வகுப்பாளர்கள் கடுமையாகப் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் பத்தாண்டுகளில் ஏறக்குறைய 300 மில்லியன் சீன நாட்டினர் ஓய்வுபெற உள்ளனர். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்குக் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கை.

