பிறப்பு விகிதம் வீழ்ச்சி: மகப்பேறு சேவைகளை நிறுத்தும் சீன மருத்துவமனைகள்

பிறப்பு விகிதம் வீழ்ச்சி: மகப்பேறு சேவைகளை நிறுத்தும் சீன மருத்துவமனைகள்

2 mins read
9895c577-717d-4768-b603-247fff49c8b5
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் அதே நேரம் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: சீனாவில் உள்ள பல மருத்துவமனைகள் பிரசவ சேவைகளை இவ்வாண்டு நிறுத்திவிட்டதாக அரசாங்க ஆதரவு ‘டெய்லி இக்கனாமிக் நியூஸ்’ தெரிவித்து உள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம் சாதனை அளவாகச் சரிந்ததைத் தொடர்ந்து பிரசவ சேவைக்கான தேவையும் குறைந்துவிட்டது.

இது ‘மகப்பேறு மந்த காலம்’ என்று மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சீனாவின் வடக்கு ஸெஜியாங் மற்றும் தென்பகுதி ஜியாங்ஸி ஆகியன உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மகப்பேறு துறையை மூடப்போவதாகக் கடந்த இரண்டு மாதங்களாகக் கூறி வருகின்றன.

இது தொடர்பான அறிவிப்புக் கடிதங்களைத் தான் கண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியாங்ஸி மாநிலத்தின் கான்ஸௌ நகரத்தில் உள்ள ஃபிஃப்த் பீப்பள்’ஸ் மருத்துவமனை மார்ச் 11 முதல் மகப்பேறு சேவைகளை நிறுத்தப்போவதாக தனது அதிகாரத்துவ ‘வீசாட்’ தளத்தில் அறிவித்து இருந்தது.

அதேபோல, ஸெஜியாங் மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவமனை பிப்ரவரி 1 முதல் மகப்பேறு தொழிலை நிறுத்துவதாக தனது ‘வீசாட்’ பக்கத்தில் அறிவித்து இருந்தது.

குழந்தை பெற்றுக்கொள்வதற்கான இளம்தம்பதியினரின் ஆசையை ஊக்கப்படுத்துவது எப்படி என்பதில் சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

மற்றொரு புறம், முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள்தொகை தொடர்பான பிரச்சினை பெரிதாகி வருகிறது. சீனா அதிகாரிகளுக்கு அது பெரிய தலைவலியாக உருவெடுத்து வருகிறது.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அதிக மரணங்கள் நிகழ்ந்ததாலும் குழந்தை பிறப்பு விகிதம் அடிமட்டத்துக்குச் சென்றதாலும் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக கடந்த ஆண்டு சீன மக்கள்தொகை சரிந்தது.

குறிப்புச் சொற்கள்