கனடாவில் மனைவியைக் கொன்ற பஞ்சாப் ஆடவர்

கனடாவில் மனைவியைக் கொன்ற பஞ்சாப் ஆடவர்

படம்: பிக்சாபே

19 Mar 2024 - 6:14 pm

1 mins read

சண்டிகார்: கனடாவில் மனைவியைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் பஞ்சாபைச் சேர்ந்த 50 வயது ஆடவர் ஒருவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ‘ஏபட்ஸ்ஃபார்ட்’ காவல்துறை கூறியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் ‘ஏபட்ஸ்ஃபார்ட்’ பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் 41 வயது பல்விந்தர் கோர், மார்ச் 15ஆம் தேதி உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

முதலில் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். இருப்பினும், அதன் பிறகு அவர் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

கைதுசெய்யப்பட்ட அவரது கணவர் ஜக்பிரீட் சிங்மீது பின்னர் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து, ஜக்பிரீட் காணொளி அழைப்பு மூலம் தமது தாயாரைத் தொடர்புகொண்டு தமது மனைவியைக் கொன்றுவிட்டதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜக்பிரீட் ஒரு வாரத்திற்கு முன்னர்தான் வேலையை நிறுத்திவிட்டு கனடாவுக்குச் சென்றதாகவும், நிதி தொடர்பாக அந்தத் தம்பதியருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் பல்விந்தரின் சகோதரி கூறினார்.

இருப்பினும், இருவரும் மகிழ்ச்சியான தம்பதியர் எனக் கூறிய ஜக்பிரீட்டின் குடும்பத்தார், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

அவர்கள் இருவரும் 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கத்திக்குத்துகுற்றச்சாட்டுகொலைமனைவி