2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்த மறுத்த மலேசியா

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்த மறுத்த மலேசியா

1 mins read
74213a59-297b-484f-8b0b-7a18b9617eba
சென்ற காமன்வெல்த் விளையாட்டுகளின் நிறைவு விழா. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியா, 2026ஆம் அண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்த மறுத்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்துவதால் பொருளியலில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த ஐயங்கள், நிதிப் பற்றாக்குறை ஆகியவை அதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விளையாட்டுகளை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் ஏற்று நடத்தவிருந்தது. ஆனால் அதற்கான செலவு அதிகமானதால் விக்டோரியா அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து அடுத்த காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்த காமன்வெல்த் விளையாட்டுகள் சம்மேளனம் மலேசியாவுக்கு 100 மில்லியன் பவுண்ட் (170 மில்லியன் வெள்ளி) நிதியுதவி வழங்க முன்வந்தது.

எனினும், பெரிய அளவிலான விளையாட்டு விழாவை ஏற்று நடத்தும் ஒட்டுமொத்தச் செலவுக்கு அந்தத் தொகை போதாது என்று மலேசிய விளையாட்டு, இளையர் துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

“அதோடு, இந்தக் குறுகிய காலத்தில் பொருளியலில் ஏற்படக்கூடிய பாதிப்பைக் கணிக்க முடியவில்லை,” என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

மலேசியாவின் இந்த முடிவு குறித்து அந்நாட்டில் மாறுபட்ட கருத்துகள் தலைதூக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் பொறுப்பிலிருந்து விக்டோரியா மாநிலம் விலகிக்கொண்டதையடுத்து இந்த விளையாட்டுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் பொறுப்பு தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் ஏற்பாட்டுப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால் பொறுப்பு அந்நாட்டிடமிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது.

அதனால் 2022 காமன்வெல்த் விளையாட்டுகளை பர்மிங்ஹாம் ஏற்று நடத்த நேரிட்டது.

குறிப்புச் சொற்கள்