ஷங்ஹாய்: தென்சீனக் கடலில் உள்ள சில கடற்பகுதிகளை சீனாவும் பலிப்பீன்சும் உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், அந்தக் கடற்பகுதிக்குள் நுழைந்த பிலிப்பீன்ஸ் கப்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீனாவின் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
சீனாவின் செயல்பாடு பொறுப்பற்றது என்றும் சினத்தைத் தூண்டிவிடும் வகையில் இருப்பதாகவும் பிலிப்பீன்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் 1999ஆம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் போர்க் கப்பலை நங்கூரமிட்டது.
இன்றும் அந்தக் கப்பல் அங்கு இருக்கிறது.
அந்தக் கடற்பகுதியைச் சொந்தம் கொண்டாடும் வகையில் அந்தக் கப்பலில் பிலிப்பீன்ஸ் ராணுவ வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த ராணுவ வீரர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல அண்மையில் பிலிப்பீன்ஸ் படகு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்தப் படகுக்குத் துணையாக பிலிப்பீன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்களும் பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான இரண்டு படகுகளும் சென்றதாக பிலிப்பீன்ஸ் ஆயுதப் படை மார்ச் 23ல் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அப்போது பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான படகை சீனாவுக்குச் சொந்தமான மூன்று படகுகள் வட்டமிட்டதாக பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படை கூறியது.
இதனால் ராணுவ வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுப்பி வைக்கும் படகிடமிருந்து அந்தக் கடலோரக் காவல் படைப் படகு பிரிக்கப்பட்டதாக பிலிப்பீன்ஸ் குறைகூறியது.
சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள அந்தப் போர்க் கப்பலை அங்கிருந்து அகற்றப்போவதாக பிலிப்பீன்ஸ் தெரிவித்திருந்தும் அவ்வாறு செய்யவில்லை என்று சீனா கூறியது.
ஆனால் அவ்வாறு எவ்வித வாக்குறுதியையும் தரவில்லை என்று பிலிப்பீன்ஸ் கூறி வருகிறது.
தென்சீனக் கடலில் நிலவும் அமைதி, நிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் நடந்துகொண்டதாக சீனாவின் கடலோரக் காவல் படை கூறியது.
தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டும் பிலிப்பீன்ஸ் படகு அதை புறக்கணித்து சர்ச்சைக்குரிய கடற்பகுதிக்குள் நுழைந்ததாக சீனா தெரிவித்தது.