மருத்துவமனைத் தாக்குதலில் 170 காஸா தூப்பாக்கிக்காரர்கள் மாண்டனர்: இஸ்‌ரேல்

2 mins read
8fa20b43-7508-4fbf-95a4-2c2d68157222
அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மக்கள் அந்தப் பகுதியை விட்டு செல்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: பாலஸ்தீனத்தின் பிரதான அல்-ஷிஃபா மருத்துவமனை மீது கடந்த சில நாள்களாக தாங்கள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை170 காஸா துப்பாக்கிக்காரர்கள் மாண்டு விட்டனர் என்று இஸ்‌ரேலிய ராணுவம் சனிக்கிழமை (மார்ச் 23) தெரிவித்தது.

மார்ச் 18 அதிகாலையில் காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்‌ரேலிய ராணுவம் நுழைந்து அங்கு மறைந்திருக்கும் காஸா படையினரைத் தேடியது. அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுரங்கத்தில்தான் ஹமாஸ் படையினரும் இதர பாலஸ்தீனப் போராளிகளும் தளம் அமைத்துள்ளனர் என்று இஸ்‌ரேல் கூறி வருகிறது.

“இதுவரை எங்கள் படையினர் அம்மருத்துவமனை பகுதியில் 170 பயங்கரவாதிகளைத் துடைத்தொழித்து விட்டனர். சந்தேகத்துக்குரிய 800க்கு மேற்பட்டவர்களின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு பெரும் அளவிலான ஆயுதங்களும் பயங்கரவாத கட்டமைப்பு வசதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என்று இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

போருக்கு முன் காஸா பகுதியின் பெரிய மருத்துவமனையாகத் திகழ்ந்த அல்-ஷிஃபா இப்போது மிகக் குறைந்த அளவிலான மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் வீடிழிந்த மக்களுக்கும் அது அடைக்கலம் அளித்து வருகிறது.

350க்கு மேற்பட்ட ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளும் அம்மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2023, அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கிய பிறகு ஆக அதிக எண்ணிக்கையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மார்ச் 21ஆம் தேதி இஸ்‌ரேலிய ராணுவம் சொன்னது.

தாங்கள் பணியாற்றும் மருத்துவமனை, ராணுவ பயன்பாட்டுக்கும் போராளிகளுக்கு அடைக்கலம் தரவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அதன் ஊழியர்கள் மறுத்து வருகின்றனர்.

இஸ்‌ரேலிய ராணுவம் முன்பு வெளியிட்ட அறிக்கைகளில் தாக்குதல்களில் மாண்டவர்கள் போராளிகள் என்று கூறியதை அண்மையில் மறுத்த ஹமாஸ் பேச்சாளர்கள், அவர்கள் நோயாளிகள் மற்றும் வீடிழந்தவர்கள் என்றும் இஸ்‌ரேல் இதன் மூலம் போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளது என்று குற்றம் சாட்டினர்.

மருத்துவமனை தாக்குதலில் தனது இரு ராணுவ வீரர்களை இழந்துவிட்டதாகக் கூறும் இஸ்‌ரேலிய ராணுவம், அந்தத் தாக்குதலில் தாங்கள் பொதுமக்கள், நோயாளிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு ஆபத்து நிகழாமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தது.

இரு தரப்பினரும் கூறுவதில் எதில் உண்மை உள்ளது என்பதைக் கண்டறிய முயலும் முயற்சியில் இறங்கிய ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அம்மருத்துவமனைக்குள் செல்ல முடியவில்லை என்றும் சொன்னது.

இஸ்‌ரேலிய ராணுவம், 2023 நவம்பரில் அல்-ஷிஃபா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியபோது பெரும் குறைகூறலுக்கு ஆளானது. அப்போது ஹமாஸ் துருப்பினர் ஒருங்கிணைப்பு மையமாகப் பயன்படுத்தி வந்த சுரங்கங்களை இஸ்‌ரேலிய ராணுவம் மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடித்தது.

குறிப்புச் சொற்கள்