காஸா போரை நிறுத்த அமெரிக்கா மும்முரம்

காஸா போரை நிறுத்த அமெரிக்கா மும்முரம்

2 mins read
47e174fa-4675-413f-9fbf-739c90bbc639
ஹமாஸ் போராளிகளிடம் உள்ள பிணைக் கைதிகளை மீட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்கா சில பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஹமாஸ் போராளிகளிடம் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதும் ஒன்று.

ஒரு பிணைக் கைதிக்கு இஸ்ரேலில் உள்ள எத்தனை பாலஸ்தீன சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தொடர்பாக தற்போது அமெரிக்கா இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கத்தாரில் இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சமரச உடன்பாட்டிற்கு கத்தார், எகிப்து, அமெரிக்க அரசாங்கங்கள் உதவி வருகின்றன.

ஒரு பிணைக் கைதிக்கு இத்தனை சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா ஒரு எண்ணிக்கையைக் கொடுத்துள்ளது. அதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இருப்பினும் ஹமாஸ் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று பெயர் குறிப்பிடவிரும்பாத இஸ்ரேல் தரப்பு அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டார்.

இருப்பினும் அமெரிக்காவின் சமரச உடன்பாட்டில் உள்ள மற்ற விவரங்களை அந்த அதிகாரி வெளியிடவில்லை. இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க தூதரகமும் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டால் இஸ்ரேல் காஸா மீது ஆறு வாரம் தாக்குதல் நடத்தாது. அதேபோல் பிணைக் கைதியாக இருக்கும் 130 நபர்களில் 40 பேர் விடுவிக்கப்படுவார்கள்.

இதற்கு முன்னர் பிணைக் கைதிகள் ஒவ்வொருவருக்கும் 3 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அப்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனர்களில் பெரும்பாலானோர் சிறு குற்றங்களைச் செய்த இளையர்கள்.

ஆனால் இம்முறை இஸ்ரேல் சிறையில் உள்ள தமது மூத்த போராளிகள் பலரை ஹமாஸ் விடுவிக்க கோரிக்கைவிடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் போராளிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானவர்களை ஹமாஸ் பிணைக் கைதியாகப் பிடித்து சென்றது.

அதற்குப்திலடி தரும் விதமாக இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. அதில் 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்காஸா