தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பப்புவா நியூகினி நிலநடுக்கம்: சிலர் மரணம், 1,000 வீடுகள் அழிவு

1 mins read
cc528633-9e0d-4074-8875-09f8703242c1
கிழக்கு செப்பிக் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மக்கள் தற்காலிகமாகப் பயன்படுத்தப் பாலம் கட்டுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியை உலுக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஐவர் மாண்டனர் என்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் அழிந்துபோயின என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதியை நிலநடுக்கம் உலுக்கியதென திங்கட்கிழமையன்று (மார்ச் 25) தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பைக் கணிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கிழக்கு செப்பிக் மாநிலத்தின் ஆளுநர் ஏலன் பர்ட் கூறினார்.

செப்பிக் ஆற்றின் கரையில் இருக்கும் பல கிராமங்கள் மோசமான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) காலை நிலநடுக்கம் உலுக்கியது. முட்டி வரையிலான உயரத்தில் இருந்த வெள்ள நீரில் மரக்கட்டையால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த காட்சிகள் படங்களில் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

நிலநடுக்கத்தில் மாண்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மாநிலக் காவல்துறை ஆணையர் கிறிஸ்டஃபர் டமாரி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பப்புவா நியூகினியில் நிலநடுக்கம் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. ‘ரிங் ஆஃப் ஃபயர்’ எனப்படும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் அந்நாடு அமைந்திருப்பது அதற்கான காரணம். தென்கிழக்காசியா, பசிபிக் வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சில நாடுகள் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ பகுதியில் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்