வடகொரியா: கிம்முடன் சந்திப்பு நடத்த கி‌ஷிதா கேட்டுக்கொண்டார்

1 mins read
77a1dd76-4b23-4fcc-96e9-7838f86e2427
வடகொரியத் தலைவர் கிம் (இடது), ஜப்பானியப் பிரதமர் கி‌ஷிதா. - படம்: ஏஎஃப்பி

சோல்: தனது சகோதரரும் வடகொரியத் தலைவருமான கிம் ஜோங் உன்னுடன் சந்திப்பு நடத்த ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கி‌ஷிதா கேட்டுக்கொண்டார் என்று திருவாட்டி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.

எனினும், தோக்கியோவின் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல காலமாக சீராக இல்லை. எனினும், உறவை மேம்படுத்த திரு கி‌ஷிதா அண்மையில் விருப்பம் தெரிவித்தார். அதை பியோங்யாங் மறுக்கவில்லை என்ற அறிகுறிகள் தென்பட்டன.

எந்த நிபந்தனையுமின்றி திரு கிம்மைச் சந்திக்கத் தாம் தயாராய் இருப்பதாக திரு கி‌ஷிதா சென்ற ஆண்டு கூறியிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க தோக்கியோ தயாராய் இருப்பதாகவும் திரு கி‌ஷிதா சொன்னார். 70களிலும் 80களிலும் ஜப்பானியக் குடிமக்களை வடகொரிய அதிகாரிகள் கடத்திய விவகாரமும் அப்பிரச்சினைகளில் அடங்கும்.

திரு கிம்மைக் கூடுமானவரை விரைவில் சந்திக்க திரு கி‌ஷிதா விருப்பம் தெரிவித்ததை திருவாட்டி கிம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார். வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான கேசிஎன்ஏ ஊடகம் அந்த அறிக்கையை வெளியிட்டது.

அதேவேளை, “தோக்கியோ அதன் கொள்கைகளைக் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றிக்கொள்ளாவிட்டால் நம்பிக்கையின்மையும் கருத்து வேறுபாடுகளும் நிறைந்த வடகொரிய-ஜப்பானிய உறவை மேம்படுத்த இயலாது என்பது இருநாட்டு உறவின் வரலாறு நமக்குப் புகட்டும் பாடமாகும்,” என்றும் திருவாட்டி கிம் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்