ஜப்பானிய ‘யென்’ மதிப்பு படுவீழ்ச்சி

ஜப்பானிய ‘யென்’ மதிப்பு படுவீழ்ச்சி

1 mins read
c014ea2f-ce9b-49c1-9b74-673daedddd47
சிங்கப்பூர் டாலருக்கு நிகரான ஜப்பானிய யென்னின் மதிப்பு இந்த ஆண்டு (2024) கிட்டத்தட்ட 5 விழுக்காடு சரிந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய ‘யென்’ நாணய மதிப்பு, மார்ச் 27ஆம் தேதி, கடந்த 34 ஆண்டுகள் காணாத அளவு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய ‘யென்’னின் மதிப்பு 151.97ஆகச் சரிந்தது.

இதையடுத்து, நாணய மதிப்பு வீழ்ச்சியைக் குறைக்கும் நடவடிக்கைகளை ஜப்பான் மேற்கொள்ளும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

சிங்கப்பூர் நேரப்படி, புதன்கிழமை (மார்ச் 27) காலை 11.55 மணிக்கு ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகரான ஜப்பானிய ‘யென்’னின் மதிப்பு 112.5323ஆக இருந்தது.

ஜப்பானின் மத்திய வங்கி சென்ற வாரம், ‘நெகட்டிவ்’ வட்டி விகித முறையை முடிவுக்குக் கொண்டுவந்தது. இத்தகைய நாணயக் கொள்கை மாற்றத்தால், முதலீட்டாளர்கள் வேறு நாடுகளில் பரிவர்த்தனை செய்ய முனைவதால் ‘யென்’னின் மதிப்பு சரிந்ததாகக் கருதப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாணய மதிப்புச் சரிவை ஈடுகட்டும் விதமாக ஜப்பானிய அரசாங்கம் 9 டிரில்லியன் ‘யென்’னைச் (S$80 பில்லியன்) செலவிட்டது.

குறிப்புச் சொற்கள்