தைப்பே: அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் தைவானுக்கு வாஷிங்டன் கொடுக்கும் ஆதரவு தொடர வேண்டும் என்று தைவானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தைவான் -சீனவுக்கு இடையே பல ஆண்டுகளாக பூசல் உள்ளது. சீனாவை சமாளிக்க தைவானுக்கு, அமெரிக்காவின் ஆதரவு முக்கியம் என்று கூறப்படுகிறது.
தைவான் தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறிவருகிறது. அதை தைவான் எதிர்க்கிறது.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் இருந்த போது தைவானுக்கு அமெரிக்க தலைவர்களை அனுப்புவது, ஆயுதங்கள் கொடுப்பது என தைவானுக்கு மிகப் பெரும் தூணாக வாஷிங்டன் இருந்தது. அதை பைடன் நிர்வாகமும் தொடர்ந்தது.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைவானுக்கு அமெரிக்கா தரும் ஆதரவு குறித்து பிரசாரத்தில் பேசப்படலாம் என்பதால் தைவான் தனக்கும் வாஷிங்டனுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.