கெய்ரோ: ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 31) காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) மீண்டும் தொடங்குவதாக எகிப்திய தொலைக்காட்சி கூறியிருந்தது. இவ்வேளையில் இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவில் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அல் குவெஹெரா என்னும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.
காஸாவில் ஏறத்தாழ ஆறு மாதம் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஆக அண்மை முயற்சியாக இது கருதப்படுகிறது.
முன்னதாக, கெய்ரோ பேச்சுவார்த்தைக்கு தனது சார்பில் பேராளர் குழுவை அனுப்ப இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இஸ்ரேல் கூறியிருந்தது.
ஆனால், தான் உடனடியாகக் குழுவை அனுப்பப் போவதில்லை என்றும் கெய்ரோ நடுநிலையாளர்கள் இஸ்ரேலிடம் என்ன பேசினார்கள் என்பதை அறிந்துகொள்ளக் காத்திருப்பதாகவும் ஹமாஸ் தரப்பு தெரிவித்தது.
போரில் ஈடுபட்டு வரும் இருதரப்புகளையும் அழைத்து சமாதானம் செய்து வைக்கும் பணியில் கத்தாரும் எகிப்தும் ஈடுபட்டு வருகின்றன.
காஸாவில் பாலஸ்தீன போராளிக் குழுக்களின் பிடியில் உள்ள 130 பிணையாளிகளில் 40 பேரை விடுவிக்கும் யோசனையைத் தொடர்ந்து ஆறு வார காலத்துக்கு இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தி வைக்க உத்தேசிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதன் அடிப்படையில், தற்போது பேச்சுவார்தையை மீண்டும் தொடங்குவதில் இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன.
பேச்சு மீண்டும் தொடங்கும் நிலையில், சண்டை நிறுத்தம் மற்றும் காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதன் தொடர்பில் பேச்சு நடத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தவும் தயார் என்று ஹமாஸ் அறிவித்து உள்ளது.
போரின் ஆரம்பக்கட்டத்தில் காஸா நகரில் இருந்தும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் தப்பி ஒடிய பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் திரும்பிவர அனுமதிக்க வேண்டும் என்றும் ஹமாஸ் விருப்பம் தெரிவித்து உள்ளது.
ஆனால், தப்பி ஓடிய அத்தனை பேருக்குப் பதில் குறிப்பிட்ட சில பாலஸ்தீனர்களை மட்டும் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் முன்வரும் என்றும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார்.
2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய காஸா போரில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 32,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.

