ஜெருசலம்: காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உணவு உதவி அமைப்பான ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ஐச் சேர்ந்த 7 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
மாண்டவர்கள் ஆஸ்திரேலியா, பிரிட்டன், போலாந்து நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் என்று அறநிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது.
கொல்லப்பட்ட ஊழியர்களில் ஒரு பாலத்தீனரும் இருந்தார். மேலும் இரு நாட்டு குடியுரிமை கொண்ட அமெரிக்க கனடியர் ஒருவரும் மாண்டார்.
ஊழியர்கள் பாதுகாப்பான இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் தாக்கப்பட்டதாக உதவி அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
ஊழியர்கள் சென்ற வாகனத்தில் தெளிவாக உதவி அமைப்பின் சின்னங்கள் இருந்ததையும் ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ குறிப்பிட்டது.
இஸ்ரேல் ராணுவத்திடம் வாகனம் செல்லும் வழிகள் குறித்து ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். கப்பல் வழியாக வந்த 100 டன் உணவுப் பொருள்களை டெய்ர் அல்-பாலாவில் உள்ள ஒரு கிடங்கில் வைத்துவிட்டு வாகனம் வெளியாகும் போது அது தாக்கப்பட்டதாக அமைப்பு கூறியது.
இந்த எங்கள் அமைப்பு மீதான தாக்குதல் மட்டும் இல்லை, இது கடினமான சூழலிலும் உதவும் மனிதாபிமான அமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ சாடியது.
இந்தத் தாக்குதல் காரணமாக காஸா வட்டாரத்தில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்துவதாக அமைப்பு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள், போர் நடக்கும் இடங்கள் போன்றவற்றுக்கு உதவி அமைப்பு சென்று உணவுகள் வழங்கும்
இந்நிலையில் தாக்குதலில் மாண்ட லால்ஸாமி பிராக்காம் ஆஸ்திரேலியர் என்று அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் உறுதிபடுத்தியுள்ளார். தாக்குதல் குறித்து இஸ்ரேல் அரசாங்கத்திடம் கேன்பரா கேள்வி கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

