தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; குறைந்தது ஒன்பது பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்

2 mins read
da942641-71da-4c18-9faa-e7667d0d2156
தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள பல பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. - படம்: இணையம்
multi-img1 of 3

தைப்பே: தைவானை ஏப்ரல் 3ஆம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது.

இதில் குறைந்தது ஒன்பது பேர் மாண்டனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்டவர்களில் மூவர் மலைகளிலிருந்து பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. லாரி ஒன்று சுரங்கப்பாதையை நெருங்கியபோது அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டது. இதில் லாரி ஓட்டுநர் மாண்டார்.

இது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தைவானை உலுக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 7.4ஆக நிலநடுக்கம் பதிவானது.

தைப்பேயின் பல பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன.

நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 26 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹுவாலியென் பகுதியில் இடிபாடுகளுக்கு அடியில் ஏறத்தாழ 20 பேர் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானுக்குத் தெற்குப் பகுதியில் உள்ள தீவுகள், பிலிப்பீன்ஸ் ஆகியவற்றுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பானின் ஒக்கினாவா தீவின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஜப்பானிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அதிகபட்சம் மூன்று மீட்டர் உயரமுள்ள அலைகள் ஜப்பானின் தென்மேற்குக் கடலோரப் பகுதி மீது மோதக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், சுனாமி எச்சரிக்கையை பிலிப்பீன்ஸ் மீட்டுக்கொண்டது.

தைவானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பிலிப்பீன்ஸில் சுனாமி அபாயம் இல்லை என்று கடற்பகுதியைக் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் காட்டுவதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கூறினர்.

Watch on YouTube
Watch on YouTube
குறிப்புச் சொற்கள்